சென்னை :முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக பொருளாளருமான டி.ஆர்.பாலுவின் மனைவியும், தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவின் தாயாருமான திருமதி ரேணுகா தேவி (வயது 79) உடல்நலக் குறைவால் 19ம் தேதி அன்று காலமானார்.
இவரது மறைவை யொட்டி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் டி.ஆர்.பாலுவின் சென்னை, டி.நகரில் உள்ள இல்லத்திற்கு நேரில் சென்று, ரேணுகா தேவியின் உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அவரது உடல் இறுதி சடங்குகள் சென்னை, டி.நகரில் உள்ள ராமன் தெருவில் நடைபெறுகிறது.
இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி குறிப்பில், ”முன்னாள் ஒன்றிய அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. டி.ஆர்.பாலு அவர்களின் துணைவியாரும், மாண்புமிகு தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் திரு. டி.ஆர்.பி.ராஜா அவர்களின் தாயாருமான திருமதி ரேணுகா தேவி பாலு அவர்கள் மறைந்த செய்தி அறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
கணவரும் மகனும் பொதுவாழ்க்கையில் ஈடுபட உறுதுணையாக இருந்து, தமது அன்பாலும் அரவணைப்பாலும் அவர்களது பணிகளுக்கு ஊக்கமளித்து, அமைதியாக அவர்களது வெற்றியின் பின்னணியாக இயங்கியவர் திருமதி. ரேணுகா தேவி பாலு அவர்கள்.
அத்தகைய பெருந்துணையின் மறைவு எவராலும் ஈடுசெய்யவியலாத பேரிழப்பு. அன்னாரை இழந்து தவிக்கும் நண்பர் திரு. டி.ஆர்.பாலு, தம்பி திரு. டி.ஆர்.பி. ராஜா ஆகியோருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
