சென்னை :தமிழ்நாட்டிற்கான மாநிலக் கல்விக் கொள்கையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 8)சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் வெளியிட்டார். இந்தக் கொள்கை உயர்கல்வி மற்றும் பள்ளிக்கல்வி என இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது, முதற்கட்டமாக பள்ளிக்கல்வித் துறைக்கான கொள்கை வெளியிடப்பட்டது
இதனை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெற்றுக்கொண்டார். கொள்கையின் முக்கிய அம்சங்களில், 3, 5, மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படக் கூடாது எனவும், தமிழ் மற்றும் ஆங்கிலம் என்ற இருமொழிக் கொள்கையை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழை முதல் மொழியாகவும், கற்பிக்கும் மொழியாகவும் நிலைநிறுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்தக் கொள்கையை உருவாக்க, ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் 14 பேர் கொண்ட குழு 2022இல் அமைக்கப்பட்டு, 650 பக்கங்கள் கொண்ட அறிக்கையை 2024 ஜூலை மாதம் முதலமைச்சரிடம் சமர்ப்பித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மாநில பள்ளிக் கல்விக் கொள்கை வெளியீட்டு விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ”தமிழ்நாட்டை பொறுத்தவரை இருமொழிக் கொள்கைதான் என்பதில் திமுக அரசு உறுதியாக உள்ளது” என்றார். மேலும், இந்த விழாவில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ”மாநில கல்விக் கொள்கை வெளியீட்டு நிகழ்ச்சி என்பது சாதாரண நிகழ்ச்சி கிடையாது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறக்கூடிய கல்வித் திருவிழாவாக, அறிவுத் திருவிழாவாக அமைந்திருக்கிறது” என்றார்.
