இரண்டு நாள் பயணமாக கோவை- திருப்பூர் செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின்.!
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வரும் ஜூலை 22 மற்றும் 23, 2025 தேதிகளில் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும், மக்களுடன் கலந்துரையாடவும், திட்டங்களைத் தொடங்கி வைக்கவும் பல்வேறு மாவட்டங்களுக்கு அடிக்கடி பயணம் மேற்கொள்கிறார். அதன் ஒரு பகுதியாக நாளை (ஜூலை 22) மற்றும் ஜூலை 23 தேதிகளில் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொள்கிறார்.
நாளை காலை சென்னையிலிருந்து விமானம் மூலம் கோவை விமான நிலையத்திற்கு வருகிறார். அங்கு அவருக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கோவையில் 15 வேலம்பாளையத்தில் புதிய மருத்துவமனை கட்டிட திறப்பு விழா, திருப்பூர் மாநகராட்சி சார்பில் கட்டப்பட்ட கோவில்வழியில் புதிய பேருந்து நிலைய திறப்பு விழா மற்றும் பொள்ளாச்சியில் கருணாநிதி சிலை திறந்து வைக்கிறார்.
மேலும், உடுமலை நேதாஜி மைதானத்தில் நடைபெறும் அரசு விழாவில் பல்வேறு துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். முடிவுற்ற திட்டங்களை திறந்து வைப்பதோடு, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி உரையாற்றுகிறார். குறிப்பாக, திருப்பூர், உடுமலைப்பேட்டை மற்றும் மடத்துக்குளம் ஆகிய பகுதிகளில் ரோடு ஷோ நடத்த உள்ளார்.
முதலமைச்சரின் வருகையை முன்னிட்டு கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, முதல்வர் வருகையை ஒட்டி ட்ரோன் கேமரா பயன்பாடு தடை, ரிமோட் கட்டுப்பாட்டு வான்வெளி சாதனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.