நாளை தமிழக பட்ஜெட் : ஆய்வறிக்கையை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்.!

ஆய்வறிக்கையில், 'நடப்பு நிதி ஆண்டில் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8% ஆக இருக்கும், தனி நபர் வருமானம் ரூ.2.78 லட்சமாக அதிகரிக்கும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN Budget - TN Govt

சென்னை : தமிழ்நாடு அரசின் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நாளை (மார்ச் 14, 2025) காலை 9:30 மணிக்கு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யவிருக்கிறர். இந்த நிலையில், தமிழ்நாடு அரசின் மாநில திட்டக் குழு சார்பில் தயாரிக்கப்பட்ட ‘தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கை 2024-25’-ஐ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட பொருளாதார ஆய்வறிக்கையில், ‘நடப்பு நிதியாண்டில் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8%ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும், தனிநபர் ஆண்டு வருமானம் 2.78 லட்சமாக அதிகரித்துள்ளது. இது தேசிய சராசரியைவிட 1.64 மடங்கு அதிகம் என்றும், சமூகத்தின் அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் பட்ஜெட் அமையவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை சட்டசபையில் மாநில பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதால், மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளில், நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் பற்றி எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இதற்கு பதிலளிக்கும் விதமாக, அதுதொடர்பான அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெறும் என்றும், பெண்கள், இளைஞர்களுக்கான சிறப்பு அறிவிப்புகள் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக, நாளை தாக்கல் செய்யப்படவுள்ள தமிழ்நாடு பட்ஜெட்டை சென்னையில் 100 இடங்களில் நேரலை செய்யப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. அதன்படி, எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையங்கள், கிண்டி பேருந்து நிலையம், மெரினா, பாண்டி பஜார் சாலை, டைடல் பார்க் சந்திப்பு உள்ளிட்ட 100 இடங்களில் காலை 9.30 மணி முதல் நேரலை  செய்யப்படும் என சென்னை மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளைய  பட்ஜெட் தாக்கல் நிகழ்வுக்கு பின்னர், அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் பேரவை தலைவர் அப்பாவு தலைமையில் நடைபெறும். அதில், பேரவை எத்தனை நாட்கள் நடைபெறும் , என்னென்ன அலுவல்களை எடுப்பது போன்றவைகள் குறித்து முடிவு எடுக்கப்படும். அதே நேரம், நாளை மறுநாள் மார்ச் 15ஆம் தேதி வேளாண்மைத் துறைக்கான நிதிநிலை அறிக்கையை வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்யவுள்ளார்.

அதனை தொடர்ந்து, மார்ச் 17ஆம் தேதி சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான உறுப்பினர்களின் விவாதம் நடைபெறும். 4 அல்லது 5 நாட்கள் நடைபெறும் இந்த விவாதத்தில் உறுப்பினர்களின் கருத்துக்களுக்கு நிதித்துறை அமைச்சர் பதிலளிப்பார். பின்னர், துறைகளின் மீதான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

பட்ஜெட் எதிர்பார்ப்புகள்

அடுத்த ஆண்டு (2026) சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், இது திமுக தலைமையிலான அரசின் கடைசி முழுமையான பட்ஜெட் ஆகும். இந்த பட்ஜெட்டில் மக்களை கவரும் புதிய அறிவிப்புகள் வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, பெண்களுக்கு வழங்கப்படும் மகளிர் உரிமைத் தொகையை தற்போதைய ரூ.1,000 இலிருந்து ரூ.2,000 ஆக உயர்த்துவது, அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்துவது போன்ற அறிவிப்புகள் வெளியாகலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Nagpur Violence -Sunita Williams LIVE
sunita williams pm modi
premalatha vijayakanth edappadi palanisamy
BJP State President Annamalai say about Nellai Rtd Police murder
ADMK Former Minister Sellur Raju
chennai corporation - dog
PM Modi says about Maha Kumbh mela 2025