“திமுக ஆட்சியில் ரூ.92 ஆயிரம் கோடி கடன்., ” துணை முதல்வர் உதயநிதியின் முதல் நிகழ்ச்சி., முதல் உரை.,
2021 முதல் திமுக ஆட்சிக்காலத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.92 ஆயிரம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை : தமிழ்நாடு துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் நியமனம் செய்யப்பட்ட பிறகு, இன்று முதல் நிகழ்வாக தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு வாரியம் சார்பில் நடைபெற்ற மகளிர் சுய உதவி குழுக்கள் தொடர்பான அரசு நிகழ்ச்சியில் உதயநிதி கலந்துகொண்டார். சேப்பாக்கம், கலைவாணர் அரங்கில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், ” தமிழ்நாடு துணை முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன் நான் கலந்து கொள்ளும் முதல் நிகழ்ச்சி, தமிழ்நாடு சுய உதவி குழுக்களுக்கான பெண்களை கௌரவிக்கும் விழாவில் இன்று கலந்து கொண்டுள்ளேன். ஏதேனும் ஒரு பரிசு அல்லது பட்டம் வென்றால் அதனை குழந்தை தாயிடம் தான் கட்ட ஆசைப்படும். தமிழ்நாடு துணை முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் எனது சகோதரிகளை இங்கு சந்திக்க வந்திருக்கிறேன்.
கடந்த, 2011 முதல் 2021 வரை 10 ஆண்டுகள் அதிமுக ஆட்சியில் மகளிர் குழுக்களுக்கு ரூ.84,815 கோடி வங்கி கடன் வழங்கப்பட்டது. ஆனால், திமுக ஆட்சி ஆட்சியமைத்து 2021 முதல் தற்போது வரையில் மட்டுமே ரூ.92 ஆயிரம் கோடி மகளிர் சுய உதவி குழு கடன் வழங்கப்பட்டுள்ளது.
அதிமுக ஆட்சியில் மணிமேகலை விருது தருவதை நிறுத்திவிட்டார்கள். நம்முடைய அரசு அமைந்த பிறகு தற்போது மீண்டும் மணிமேகலை விருது வழங்கபட்டு வருகிறது. இதுதான் மகளிர் முன்னேற்றத்தில் திராவிட அரசு வைத்துள்ள அக்கரைக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு. பெண்களுக்கு சமூக விடுதலை வேண்டும். அதேபோல் பொருளாதார விடுதலையும் வேண்டும என்று ஏறத்தாழ 100 ஆண்டுகளுக்கு முன்னரே குரல் கொடுத்தவர் தான் தந்தை பெரியார். அவருடைய வழியில் பெண்கள் முன்னேற்றத்திற்கு உதவும் வகையில் அடுக்கடுக்கான திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தி வருகிறது.
திமுக அரசு பொறுப்பேற்ற உடன் நடைபெற்ற முதல் உள்ளாட்சித் தேர்தலில் மகளிருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இன்று மாநகராட்சி மேயர்கள் , ஊராட்சி மன்ற தலைவிகள் என ஆயிரக்கணக்கான பெண் தலைவர்கள் பொறுப்பில் உள்ளனர். இதற்கு காரணம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான். இந்தியாவுக்கு எடுத்துக்காட்டாக தமிழகம் திகழ்கிறது.
திராவிட மாடல்அரசை பொருத்தவரை எல்லா திட்டங்களிலும் சமூக நீதி முன்னிறுத்தப்பட வேண்டும் என்பதே எங்கள் அடிப்படை கொள்கை. பெண்கள் முன்னேறி வரவேண்டும் என்ற நோக்கத்தில் தான் இத்திட்டம் அனைத்தும் செயல்படுத்தப்படுகிறது. பெண்கள் தொழில் முனைவோர்களாக, தொழிலதிபர்களாக வர வேண்டும் என அக்கறையோடு திமுக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இந்த ஆண்டு சுய உதவி குழுக்களுக்கு ரூ.35 ஆயிரம் கோடி கடன் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு போல இந்த ஆண்டும் இலக்கை தாண்டி அதிக கடன் வழங்குவோம் என்று செயல்பட்டு வருகிறோம்.” என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார்.