சென்னை :திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், கட்சியை மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இணைத்துள்ளார். இந்த சந்திப்பு தமிழக அரசியலில் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரேமலதா விஜயகாந்தை வரவேற்று சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். “முத்தமிழறிஞர் கலைஞர் மேல் மாறாத அன்பு கொண்டவரும், எனது அன்பு நண்பருமான ‘கேப்டன்’ விஜயகாந்த் அவர்கள் உருவாக்கிய தேசிய முற்போக்கு திராவிட கழகம், இன்று மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இணைந்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது” என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் ஸ்டாலின் பதிவில், “சகோதரர் கேப்டன் உருவாக்கிய இயக்கத்தைத் தற்போது திறமையாக வழிநடத்தி வரும் பொதுச்செயலாளர் அன்புச் சகோதரி திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்களையும், அக்கட்சியின் நிர்வாகிகளையும் வருக வருக என வரவேற்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். கருப்பு சிவப்பு கொடியை தாங்கிய தேமுதிகவின் நல்வரவு தமிழ்நாட்டின் உயர்வுக்கு பங்களிக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.“#DravidianModel ஆட்சி தொடரவும், தமிழ்நாடு அனைத்து வகையிலும் முன்னேறவும் இணைந்து பயணிப்போம்” என்று முடித்துள்ள அவரது பதிவு, திமுக – தேமுதிக இணைப்பின் மூலம் கூட்டணி மேலும் வலுப்பெறும் என்பதை வெளிப்படுத்துகிறது.
இந்த இணைப்பு 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு கூடுதல் பலத்தை அளிக்கும் என்று கட்சி வட்டாரங்கள் நம்புகின்றன.ஒட்டுமொத்தமாக, தேமுதிகவின் திமுக கூட்டணியில் இணைவது தமிழக அரசியலில் பெரும் திருப்புமுனையாக அமைந்துள்ளது. NDA கூட்டணிக்கு தேமுதிக உறுதியாக வரும் என எதிர்பார்த்த எடப்பாடி பழனிசாமிக்கு பேரிடியாக அமைந்துள்ளது.
