சென்னை : தமிழக முதலமைச்சரை ஒருமையில் அவதூறாகவும், மிரட்டும் வகையிலும் பேசியதாக, விளாத்திகுளம் தொகுதி திமுக எம்.எல்.ஏ ஜி.வி. மார்க்கண்டேயன் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய ஜி.வி. மார்க்கண்டேயன், முதலமைச்சரை மிகவும் தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சித்ததுடன், சட்டமன்றத்தைப் பூட்டினால் உடைத்துவிடுவோம் என்பது போன்ற மிரட்டும் தொனியிலும் பேசியிருந்தார். அவர் ஆவேசமாகப் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்த விவகாரம் குறித்து எழுந்த புகாரின் அடிப்படையில், தூத்துக்குடி காவல்துறை ஜி.வி. மார்க்கண்டேயன் மீது 3 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரைக் கைது செய்துள்ளது.
இந்தக் கைது நடவடிக்கைக்கு திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது "விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி. மார்க்கண்டேயன் அவர்களை அராஜகமான முறையில் கைது செய்திருக்கும் தவெக அரசின் செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது."
"விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல் தொடர்ந்து திமுகவினர் மீது காவல்துறையை ஏவி அடக்கிடப் பார்க்கும் தவெக அரசுக்கு, ஜனநாயக வழியில் தக்க பாடம் புகட்டப்படும்."கைது செய்யப்பட்டுள்ள மார்க்கண்டேயனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
