சென்னை : தமிழ்நாட்டில் தற்போதைய அரசியல் சூழல் குறித்து அதிமுக மூத்த தலைவர் தம்பிதுரை செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், அதிமுகவின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து எழுந்த கேள்விகளுக்கு அவர் தெளிவான பதிலளித்தார்.
ஒரு செய்தியாளர், “முதலமைச்சரா வருவாரா? அதிமுக – திமுக பேச்சுவார்த்தை நடக்குதா?” என்று கேட்டதற்கு, தம்பிதுரை பதிலளித்தார் “இதெல்லாம் எங்கள் தலைவர் சொல்ல வேண்டிய விஷயங்கள். நான் சொல்வது என்னவென்றால், எங்கள் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நல்ல ஒரு ஆட்சியை தருவார் என்று எங்களுக்கு முழு நம்பிக்கை இருக்கிறது.” எனவும் தெரிவித்தார்.
மேலும், “அதிமுகவுக்கு திமுகவுடன் கூட்டணி உள்ளதா?” என்ற கேள்விக்கு அவர் கூறியதாவது:“இல்லை, இல்லை. நான் சொல்வது என்னவென்றால், பொதுமக்களிடையே அதிமுக ஆட்சிக்கு வர வேண்டும் என்ற வலுவான உணர்வு இருக்கிறது. எங்கள் தலைவர் எடப்பாடி பழனிசாமி பல இடங்களுக்கு செல்லும்போது மக்கள் காட்டிய உணர்ச்சி மற்றும் எதிர்பார்ப்பை நாங்கள் பார்த்தோம்.
கடவுள் அருளால் சரியான நேரத்தில் அது நடக்கும்.”தம்பிதுரையின் இந்தப் பேட்டி, தற்போதைய அரசியல் சூழலில் அதிமுகவின் தெளிவான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது. தவெக 108 இடங்களுடன் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், அதிமுக தரப்பில் இருந்து வரும் இத்தகைய கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளன.
