அதிமுக கூட்டணியில் அமமுக...வாழ்த்து தெரிவித்த இபிஎஸ்! நன்றி தெரிவித்த டிடிவி தினகரன்!

கழகத்தை மனதார வரவேற்று வாழ்த்திய அஇஅதிமுகவின் பொதுச்செயலாளர் மதிப்பிற்குரிய திரு. எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என டிடிவி தெரிவித்துள்ளார்.

Featured image

சென்னை :தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (அமமுக) இன்று அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது. இதனை வரவேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், “தீயசக்தி திமுகவின் கொடுங்கோல் ஆட்சியை வேரடி மண்ணோடு வீழ்த்திடவும், வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்திடவும், மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பொற்கால ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் அமைத்திட, அமமுக பொதுச்செயலாளர் மரியாதைக்குரிய திரு. டிடிவி தினகரன் அவர்களை அன்போடு வரவேற்று, அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்ட அறிக்கையில், “மக்கள் நலனை மையமாகக் கொண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்த அமமுகவை மனதார வரவேற்று வாழ்த்திய அஇஅதிமுகவின் பொதுச்செயலாளர் மதிப்பிற்குரிய திரு. எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

டிடிவி தினகரன் மேலும் தெரிவித்ததாவது: “தமிழக மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் நல்லாட்சியை தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் தமிழகத்தில் மீண்டும் அமைத்திட நாம் அனைவரும் ஒருங்கிணைந்து களப்பணியாற்றிடுவோம். கடந்த நான்கரை ஆண்டுகளாக இருளில் மூழ்கியிருக்கும் தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் புதிய வெளிச்சத்தை பாய்ச்சிடும் சரித்திரமிக்க வெற்றியைப் படைத்திடுவோம்!” என்று உற்சாகத்துடன் கூறியுள்ளார்.

இந்தக் கூட்டணி அறிவிப்பு 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு தமிழக அரசியல் களத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக – பாஜக – அமமுக இணைந்து திமுகவுக்கு எதிராக பலமான எதிர்க்கட்சியாக உருவெடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இரு தலைவர்களும் “மக்கள் நலன்” மற்றும் “அம்மா ஆட்சி” என்ற கோஷங்களை முன்னிலைப்படுத்தி, திமுகவின் “குடும்ப ஆட்சி” மற்றும் “கொடுங்கோல் ஆட்சி” என்று விமர்சித்துள்ளனர்.இந்த இணைப்பு தமிழகத்தில் புதிய அரசியல் சமன்பாட்டை உருவாக்கியுள்ளது. பொங்கல் பண்டிகைக்குப் பிறகு தேர்தல் களம் சூடுபிடிக்கும் நிலையில், இந்தக் கூட்டணி திமுக அரசுக்கு பெரும் சவாலாக அமையும் என்று அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன. மக்களின் ஆதரவுடன் “நல்லாட்சி”யை மீண்டும் கொண்டு வருவோம் என்று இரு தரப்பும் உறுதியளித்துள்ளன.