சென்னை :திமுகவில் ஓ. பன்னீர்செல்வம் இணைந்தது தமிழக அரசியலில் மிக முக்கியமான திருப்புமுனையாக அமைந்துள்ளது. முன்னாள் முதலமைச்சரான ஓ. பன்னீர்செல்வம், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பிறகு தனியாக செயல்பட்டு வந்த நிலையில், இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் தொண்டனாக இணைந்தார்.இணைப்பு நிகழ்ச்சியின் போது ஸ்டாலின் அவரை ஆரத்தழுவி வரவேற்றார். ஓ. பன்னீர்செல்வம் திமுக உறுப்பினர் படிவத்தில் கையெழுத்திட்டு அதிகாரப்பூர்வமாக இயக்கத்தில் சேர்ந்தார். அவருடன் அவரது மகன் ரவீந்திரநாத் குமார் உள்ளிட்ட சில ஆதரவாளர்களும் இணைந்தனர்.
இணைந்த பிறகு பேசிய ஓ. பன்னீர்செல்வம், அண்ணா மற்றும் கலைஞர் காட்டிய வழியில் ஸ்டாலின் அரவணைப்பு ஆட்சி நடத்தி வருவதை பாராட்டினார். சாதி மத பேதமின்றி அனைத்து மக்களையும் அணைத்து ஆளும் தாயுள்ளம் கொண்ட ஆட்சி என்று புகழ்ந்தார். திமுகவை தாய்க்கழகம் என்று அழைத்து, ஒரு சாதாரண தொண்டனாக இணைந்ததாகவும், இயக்க வளர்ச்சிக்காக உழைப்பேன் என்றும் உறுதியளித்தார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் X-இல் வெளியிட்ட பதிவில், ஓ. பன்னீர்செல்வத்தை அருமைச் சகோதரர் என்று அழைத்து வரவேற்றார். அவர் அன்பானவர், பண்பானவர், அடக்கமானவர் என்று புகழ்ந்து, திராவிட இயக்கக் கொள்கை காக்கும் பேரியக்கத்தில் இணைந்ததை வரவேற்றார். 2026 தேர்தலை தமிழ்நாட்டுக்கும் பாசிச பாஜகவுக்கும் இடையேயான ஜனநாயகப் போராக விவரித்து, பல ஜனநாயக சக்திகள் கழகக் கூட்டணியில் இணைந்து வருவதாகக் குறிப்பிட்டார்.
தமிழ்நாடு வெல்லட்டும் என்று வாழ்த்தி பதிவை முடித்தார்.இந்த இணைப்பு 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு நிகழ்ந்திருப்பது திமுக கூட்டணிக்கு கூடுதல் வலிமையை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தென் மாவட்டங்களில் ஓ. பன்னீர்செல்வத்துக்கு உள்ள ஆதரவு திமுகவுக்கு பயனளிக்கும் வகையில் இருக்கும் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன. இது அதிமுகவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள அதேவேளை, திமுக தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
