சென்னை : தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு தனது முதல் பிறந்தநாளை இன்று (ஜூன் 22) கொண்டாடும் முதலமைச்சர் விஜய்க்கு நாடு முழுவதும் இருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், பல்வேறு கட்சித் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் சமூக வலைதளங்கள் வாயிலாக தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்து செய்தியில், "தமிழக முதலமைச்சர் திரு சி. ஜோசப் விஜய் ஜி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அவர் நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்வு வாழ பிரார்த்திக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது வாழ்த்துச் செய்தியில், "தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். நல்ல உடல்நலத்துடனும், அனைத்து முயற்சிகளிலும் வெற்றியுடனும் திகழ வாழ்த்துகிறேன். தமிழ் மக்களின் உரிமைகள், கண்ணியம் மற்றும் முன்னேற்றத்திற்காக இணைந்து செயல்பட நான் எப்போதும் துணை நிற்பேன்" என தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்தில், "மாண்புமிகு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்களுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துகள். மகிழ்ச்சியுடனும், உடல் மற்றும் மனநலத்துடனும் பொதுவாழ்வில் தொடர்ந்து பணியாற்ற வாழ்த்துகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, "மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். நீண்ட ஆயுளுடனும், நல்ல உடல்நலத்துடனும் மக்கள் பணியில் தொடர்ந்து ஈடுபட வாழ்த்துகிறேன்" என தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி எம்.பி. கனிமொழி தனது வாழ்த்துச் செய்தியில், "தமிழ்நாடு முதலமைச்சர் திரு ச. ஜோசப் விஜய் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அவரது மக்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்" என்று கூறியுள்ளார்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், "தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், முதலமைச்சருமான விஜய் அவர்களின் 52-ஆவது பிறந்தநாளில் உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நல்ல உடல்நலத்துடன் நீண்ட ஆயுள் பெற்று மக்களுக்கு தொடர்ந்து சேவை செய்ய வாழ்த்துகிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், "தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், தமிழ்நாட்டு முதல்வருமான விஜய் அவர்களுக்கு எனது உளப்பூர்வமான பிறந்தநாள் வாழ்த்துகள். அவரது அரசியல் மற்றும் பொதுவாழ்க்கைப் பணிகள் மேலும் சிறக்கட்டும்" என்று தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை தனது வாழ்த்தில், "முதலமைச்சர் விஜய் அவர்கள் நல்ல உடல்நலத்துடனும் நீண்ட ஆயுளுடனும் மக்கள் பணியை தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்" என கூறியுள்ளார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தனது வாழ்த்தில், "இந்த பிறந்தநாள் ஆண்டுதோறும் வெற்றிகரமாகவும் மகிழ்ச்சிகரமாகவும் அமையட்டும். நீங்கள் மேற்கொள்ளும் அரசியல் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறவும், தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக நல்லாட்சியை வழங்கவும் இயற்கைத் தாயின் அருள் கிடைக்கட்டும்" என்று வாழ்த்தியுள்ளார்.
முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு விஜய் கொண்டாடும் முதல் பிறந்தநாள் என்பதால், அரசியல் வேறுபாடுகளை கடந்து பல்வேறு கட்சித் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
