சென்னை :தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 4-ஆம் தேதி நடைபெறும். வேட்புமனு தாக்கல் மார்ச் 30 முதல் ஏப்ரல் 6 வரை நடைபெறும். மார்ச் 31, ஏப்ரல் 3, 5 ஆகிய விடுமுறை நாட்களால் தமிழகத்தில் வேட்புமனு தாக்கலுக்கு உண்மையில் 5 நாட்கள் மட்டுமே கிடைக்கும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்தார்.
இதனையடுத்து, அரசியல் கட்சிகள் பிரச்சாரங்களை தீவிரமாக தொடங்கியுள்ளது. அந்த வகையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இந்த தேர்தல் அறிவிப்பை வரவேற்று, “உழைப்பை அள்ளிக் கொடுங்கள்! உதயசூரியன் உதிக்கட்டும்!” என்று தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். வீடுதோறும் சென்றடைந்துள்ள #DravidianModel-இன் சாதனைகளை எடுத்துரைத்த அவர், இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழ்நாட்டை முன்னேற்றும் தொலைநோக்குத் திட்டங்களை வலியுறுத்தினார்.
“அரணென அனைவருக்குமான தமிழ்நாட்டைக் காக்கும் கொள்கை உறுதி! துணிச்சல்! இதுதான் தி.மு.க.” என்று தலைவர் தெரிவித்தார். ஏப்ரல் 23 அன்று உதயசூரியன் சின்னத்திலும், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியினரின் சின்னங்களிலும் வாக்குகளை அளிக்க தொண்டர்களை அயராது உழைக்க அழைத்தார்.#DravidianModel 2.0 அமையும் நாள் வரை ஊண் உறக்கம் இல்லாமல் பாடுபடுவோம் என்று திமுக தலைவர் உறுதியளித்தார்.
தமிழ்நாட்டில் திமுகவுக்கு ஆதரவாகவும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆதரவாகவும் மிகப்பெரிய அலை உருவாகியுள்ளதாகவும், இந்த வெற்றி 2021 தேர்தலை விட பெரிதாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.இந்த அறிவிப்பு திமுக தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
