“ஆட்சி – அதிகாரத்தில் பங்கு.,” இந்த கேள்வி அவசியம் இல்லாதது.! – திருமாவளவன்.
ஆட்சி - அதிகாரத்தில் பங்கு என்பதை 1999 முதல் கூறி விசிக கூறி வருகிறது. இது குறித்த கேள்விகள் அவசியமில்லாதது என திருமாவளவன் கூறியுள்ளார்.
சென்னை : விசிக நடத்தவுள்ள மது ஒழிப்பு மாநாடு தான் தற்போது தமிழக அரசியலில் ‘ஹாட் டாபிக்’-காக மாறியுள்ளது. வரும் அக்டோபர் 2ஆம் தேதி விசிக சார்பில் மது ஒழிப்பு மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்கு அனைத்து கட்சி தலைவர்களையும் அக்கட்சித் தலைவர் திருமாவளவன் வாய்மொழியாக அழைப்பு விடுத்தார். அப்போது, ‘விருப்பம் இருந்தால் அதிமுகவும் கலந்து கொள்ளலாம்.’ என கூறினார்.
திமுக கூட்டணியில் இருந்து கொண்டு, அதிமுகவுக்கு அழைப்பு விடுத்த திருமாவளவனின் பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசு பொருளாக மாறியது. இதனால், திமுக கூட்டணியில் விரிசலா என்றெல்லாம் பேசப்பட்டது. இதற்கு அடுத்தபடியாக, “ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு” என்று திருமாவளவன் பேசிய வீடியோ அவரது சமூக வலைதள பக்கத்தில் வெளியாகி, பின்னும் ‘டெலிட்’ செய்யப்பட்டு, மீண்டும் மறு பதிவேற்றம் செய்யப்பட்டது.
தற்போது திமுக கூட்டணியில் இருக்கும் விசிக ஆட்சி – அதிகாரத்தில் பங்கு கேட்கிறது என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது. இது குறித்து, ஏற்கனவே திருமாவளவன் விளக்கமளித்துள்ளார். அதில் , ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்பதை நாங்கள் (விசிக) 1999இல் தேர்தல் அரசியலில் விசிக களமிறங்கியது முதலே கூறி வருகிறோம் எனக் கூறினார்.
அண்மையில் திருப்பூரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மீண்டும் இந்த விவகாரம் குறித்து விளக்கமளித்துள்ளார். “ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்பது ஜனநாயக கோரிக்கை. இதனை 1999இல் நாங்கள் தேர்தல் அரசியலில் களமிறங்கியது முதல் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆட்சியில் அதிகாரத்திலும் பங்கு என்பதை மையமாக வைத்துதான் 2016இல் கூட்டணி (மக்கள் நல கூட்டணி) அமைக்கவும் செய்தோம்.
திரும்பத் திரும்ப இந்த கேள்வி அவசியம் இல்லாதது. திமுகவிடம் நாங்கள் நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொள்ள திமுகவுக்கு அழைப்பு விடுத்துள்ளோம். அவர்களும் கலந்து கொள்வதாக கூறியுள்ளனர் என விசிக தலைவர் திருமாவளவன் கூறினார்.