செங்கல்பட்டு:தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆகஸ்ட் 9, 2025 அன்று நடைபெற்ற விழாவில், 20,021 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், திராவிட மாடல் அரசின் முக்கிய கொள்கைகளை விவரித்தார். “கல்வியும் மருத்துவமும் திராவிட மாடல் அரசின் இரு கண்கள். 2021 முதல் இதுவரை 17.74 லட்சம் பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. மாநிலக் கல்விக் கொள்கையை வெளியிட்டு, ஏற்றத் தாழ்வற்ற சமூகத்தை உருவாக்குவதற்கு நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்,” என்று கூறினார்.
அதே நாளில், செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரத்தில் ரூ.115 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய அரசு தலைமை மருத்துவமனையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த மருத்துவமனையில் 400 படுக்கைகள், 6 அறுவை சிகிச்சை மையங்கள், குழந்தைகள் நலப் பிரிவு, மகப்பேறு பிரிவு உள்ளிட்ட நவீன வசதிகள் உள்ளன. இந்த மருத்துவமனை, பொது மக்களுக்கு உயர்தர மருத்துவ சேவைகளை வழங்குவதற்கு முக்கிய பங்காற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நிகழ்ச்சிகளை தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில் ” இந்தியாவில் பிரதமர் மோடி உள்ளிட்ட பிற மாநில முதலமைச்சர்களால் சாதிக்க முடியாத பொருளாதார வளர்ச்சியை தமிழகம் அடைந்துள்ளது. இது இபிஎஸ்-க்கு வயிற்றெரிச்சலை ஏற்படுத்துகிறது. திராவிட மாடல் 2.0 இன்னும் வேகமாக முன்னேறி, இந்தியாவே பாராட்டும் வளர்ச்சியை நாங்கள் உருவாக்குவோம்,” என்று தெரிவித்தார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” வளர்ச்சி என்பது பொருளாதார அடிப்படையில்தான். அப்படி தான் தமிழ் நாடு வளர்த்துக்கொண்டு இருக்கிறது. இதனை புரிந்துகொள்ளாமல் அறிவு ஜீவிபோல் அறிக்கை எடப்பாடி பழனிசாமி வெளியிடுகிறார் . மோடியால் முடியாததை ஸ்டாலின் சாதிக்கிறார் என்பதே அவர்களுக்கு வயிற்றெரிச்சல் இதை பொறுக்க முடியாமல் எதிர்க்கட்சித் தலைவர், நண்பருடன் இணைந்து பேசுகிறார். திராவிட மாடல் 2.0 இன்னும் வேகமாக வளர்ச்சியடைந்து செல்லும் தமிழக மக்கள் ஆதரவுடன் எங்கள் பயணம் தொடரும் தொடரும் தொடரும்” எனவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
