தமிழகத்தில் நாளை இந்த 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், உட்பட மொத்தம் 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது.

heavy rain tn update

சென்னை :டிசம்பர் 1-ஆம் தேதி காலை வடதமிழகம் மற்றும் புதுவை பகுதிகளில் நிலவிய “ஃபெஞ்சல்” புயல், மதியம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுக்குறைந்து, மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும் மேலும் வலுக்குறைந்து, வடதமிழக உள் பகுதிகளில் நிலவுகிறது. இது, நாளை காலை தென்கிழக்கு மற்றும் மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவக்கூடும்.

இதன் காரணமாக தமிழகத்தில் நாளை பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மேலும், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர் மற்றும் திருப்பத்தூர் ஆகிய 15  மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதன் காரணமாக மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரையில் ” அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31-32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்” எனவும் வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நாளை இந்த 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!