பாமகவில் இல்லாதவர் என்னை எப்படி நீக்க முடியும்? – டென்ஷனான ஜி.கே.மணி கேள்வி!

அன்புமணி அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது. அவர் எப்படி என்னை நீக்க முடியும்? என ஜி.கே.மணி கேள்வி எழுப்பியுள்ளார்.

Featured image

சென்னை :பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) பென்னாகரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் மூத்த நிர்வாகியுமான ஜி.கே.மணி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். கட்சி விரோத செயல்பாடுகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததாக குற்றம்சாட்டி, கட்சித் தலைவரும் மக்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் இந்த கடும் நடவடிக்கையை எடுத்துள்ளார். கட்சியின் அமைப்பு விதி 30(இ) பிரிவின்படி, கடந்த டிசம்பர் 18-ஆம் தேதி ஜி.கே.மணிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

ஒரு வார காலக்கெடுவுக்குள் விளக்கம் அளிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்ட நிலையில், அவரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. இதைத் தொடர்ந்து பாமக ஒழுங்கு நடவடிக்கைக் குழு சென்னையில் கூடி விவாதித்து, அவரை நீக்க பரிந்துரை செய்தது. இதை அன்புமணி ராமதாஸ் ஏற்றுக்கொண்டு நீக்க உத்தரவு பிறப்பித்தார்.அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் யாரும் ஜி.கே.மணியுடன் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். இது கட்சியின் ஒழுங்கு நடவடிக்கையின் ஒரு பகுதியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஜி.கே.மணி, நீக்க உத்தரவுக்கு கடும் அதிர்ச்சி தெரிவித்தார். “அன்புமணி அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது. அவர் எப்படி என்னை நீக்க முடியும்? எல்லா அதிகாரமும் ராமதாஸிடமே உண்டு” என்று கூறி, நீக்க உத்தரவின் சட்டரீதியான செல்லுபடியை கேள்விக்குள்ளாக்கினார். மேலும், “அன்புமணியை கட்சியில் இருந்து நீக்கிவிட்டதாக ராமதாஸ் அறிவித்துவிட்டார்.

என்னை கட்சியில் இருந்து அன்புமணி நீக்குவது ஆச்சர்யமாக உள்ளது” என்று விமர்சித்தார். இந்த சம்பவம் பாமகவில் உட்கட்சி பிளவு மற்றும் அதிகார மோதல் குறித்த விவாதங்களை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. கட்சி நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் இடையேயான உறவு குறித்த ஊகங்களும் எழுந்துள்ளன. 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் இந்த உள் பிரச்சனை கட்சியின் ஒற்றுமையை பாதிக்கலாம் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். ஜி.கே.மணி தரப்பில் இருந்து சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் பேசப்படுகிறது.