திமுகவை தீய சக்தி என்று நான் சொல்லவில்லை – ஓபிஎஸ் விளக்கம்!

திமுகவில் இணைந்த முடிவை பலரும் பாராட்டி வருகின்றனர் என ஓபிஎஸ் கூறியுள்ளார்.

DMK o panneerselvam

சென்னை :தமிழக அரசியலில் பெரும் திருப்புமுனை ஏற்பட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) இன்று (பிப்ரவரி 27, 2026) சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். தமிழக அரசியல் வரலாற்றில் முதன்முறையாக, ஒரு கட்சியில் மூன்று முறை முதலமைச்சராக பதவி வகித்தவர் திமுகவில் இணைந்துள்ளார்.

அதிமுகவில் இருந்து 2022-இல் நீக்கப்பட்ட ஓபிஎஸ், அதன் பிறகு “அ.தி.மு.க தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகம்” என்ற தனி அமைப்பை நடத்தி வந்தார். அதிமுகவில் மீண்டும் இணைவதற்கான முயற்சிகள் தோல்வியடைந்ததால், கட்சி மாற்ற முடிவெடுத்தார். இன்று அவருடன் அவரது மகன் ரவீந்திரநாத் குமார் உள்ளிட்ட ஆதரவாளர்களும் திமுகவில் இணைந்தனர்.

சென்னை தியாகராயநகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இருந்து அமைச்சர் எம்.ஆர்.கே. சேகர்பாபு உடன் ஒரே காரில் அண்ணா அறிவாலயத்திற்கு வந்த ஓபிஎஸ், முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்தார். ஸ்டாலின் அவரை ஆரத்தழுவி வரவேற்றார். திமுக உறுப்பினர் படிவத்தில் கையெழுத்திட்டு அதிகாரப்பூர்வமாக இணைந்தார். இந்த நிகழ்ச்சி திமுக தலைமையகத்தில் பெரும் ஆர்வத்துடன் நடைபெற்றது.

இணைந்த பிறகு பேசிய செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் ““அண்ணா, கருணாநிதி வழியில் முதல்வர் ஸ்டாலின் சிறப்பாக ஆட்சி நடத்துகிறார். திமுக ஒரு தலை சிறந்த இயக்கம். அதிமுகவுக்கு இனி எதிர்காலமே இல்லை. எடப்பாடி பழனிசாமி அதிகாரப்போக்குடன் செயல்படுகிறார். அவர் அ.தி.மு.க.வை அழிவுப்பாதைக்கு கொண்டு செல்கிறார். தென் மாவட்டத்திலிருந்து ஒரு தலைவர் வரக்கூடாது என அவர் உறுதியாக உள்ளார்.

தாய்க்கழகமாம் திமுகவில் இணைந்துள்ளேன். தளபதி எடுக்கின்ற முடிவுக்கு நான் முழுமையாக கட்டுப்படுவேன். தி.மு.க மகத்தான வெற்றி பெறும். 2026 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க மகத்தான வெற்றியைப் பெற்று, மீண்டும் முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்பார். முதல்வர் ஸ்டாலின் வாய்ப்பளித்தால் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவேன். சுயமாக சிந்தித்து திமுகவில் இணைந்துள்ளேன். எந்த அழுத்தமும் இல்லை. இனி எனது உழைப்பு முழுவதும் உதயசூரியன் சின்னத்துக்கே.” எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த இணைப்பு 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு நிகழ்ந்துள்ளது. ஓபிஎஸ்-இன் வலுவான ஆதரவு தென் மாவட்டங்களில் (தேனி, பொதுநாயக்கனூர் போன்ற பகுதிகளில்) உள்ளது. இது திமுகவுக்கு கூடுதல் வாக்கு வங்கியை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம், அதிமுகவுக்கு பெரும் அதிர்ச்சி அளித்துள்ளது.