சென்னை :ஆலங்குளம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. மனோஜ் பாண்டியன், இன்று (நவம்பர் 4, 2025) சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். ஓ.பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) ஆதரவாளரான அவர், இன்று மாலை 4 மணிக்கு தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக அறிவித்தார். “எஞ்சிய வாழ்க்கையில் திராவிடக் கொள்கையைப் பாதுகாக்க திமுகவில் இணைந்துள்ளேன்” என்று பேசினார்.
அதனைத்தொடர்ந்து, மனோஜ் பாண்டியன், அதிமுகவை கடுமையாக விமர்சித்தார். “இன்றைய அதிமுக, பாஜகவின் கிளைக் கழகமாக செயல்படுகிறது. வேறொரு இயக்கத்தின் சொல்படி நடக்கும் துர்பாக்கிய நிலை உள்ளது. எடப்பாடி பழனிசாமி, தன்னையும் குடும்பத்தையும் காப்பாற்ற பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளார்” என்று குற்றம்சாட்டினார்.
மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று அறிவித்த எடப்பாடி, தற்போது கூட்டணி வைத்துள்ளதற்கு ஏன் மாவட்ட செயலாளர்களை கூட்டவில்லை என்று கேள்வி எழுப்பினார்.முதலமைச்சர் ஸ்டாலினைப் பாராட்டிய மனோஜ் பாண்டியன், “திராவிடக் கொள்கைகளை முழுமையாகப் பாதுகாக்கும் தலைவராகவும், மாநில உரிமைகளைப் பாதுகாக்கும் தலைவராகவும் ஸ்டாலின் திகழ்கிறார்” என்று கூறினார்.
மேலும், ஓபிஎஸ், டிடிவி தினகரன், செங்கோட்டையன் போலவே, எடப்பாடி பழனிசாமியை தோற்கடிக்கவே செயல்படுவேன் என்று உறுதியளித்தார். திமுகவில் இணைந்தது, கொள்கை அடிப்படையிலான முடிவு என்று வலியுறுத்தினார்.இந்த இணைப்பு, அதிமுகவில் ஓபிஎஸ் ஆதரவாளர்களின் அதிருப்தியை வெளிப்படுத்துகிறது. மேலும், எடப்பாடி பழனிசாமி தரப்பு இதுவரை பதிலளிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
