இது காசு கொடுத்து கூட்டிய கூட்டமல்ல – ராமதாஸ் பேச்சு!

சாதிவாரி கணக்கெடுப்பு,10.5% இடஒதுக்கீட்டை நிறைவேற்ற முதல்வரை சந்தித்து பாடம் எடுத்தும் பயன் இல்லை என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

pmk ramadoss speech

சென்னை :இன்று புதுச்சேரி-திண்டிவனம் சாலையில் உள்ள பட்டானூர் சங்கமித்ரா அரங்கில் நடைபெற்ற பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில், நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் 36 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 4,000-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தை, “காசு கொடுத்து கூட்டிய கூட்டமல்ல, தமிழக மக்களின் நலனுக்காக ஒன்றிணைந்த வரலாற்று சிறப்புமிக்க கூட்டம்” என்று ராமதாஸ் விவரித்தார்.

இந்தத் தீர்மானங்கள் பாமகவிற்கு மட்டுமல்ல, தமிழக மக்களின் பிரச்னைகளைத் தீர்க்கும் நோக்கம் கொண்டவை என்று அவர் வலியுறுத்தினார்.ராமதாஸ், தனது உரையில், “கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் அனைத்துமே நீங்கள் தான். தமிழகத்தின் அனைத்து பிரச்னைகளுக்காகவும் நான் போராடினேன்,” என்று தொண்டர்களை உற்சாகப்படுத்தினார். 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றிகரமான கூட்டணி அமைப்பதற்கு தொண்டர்கள் வழங்கிய முழு அதிகாரத்தை சரியாகப் பயன்படுத்துவேன் என்று உறுதியளித்தார். “தொண்டர்கள் விரும்பும் வகையில், மக்களின் நலனுக்கு உகந்த கூட்டணியை உருவாக்குவேன்,” என்று கூறினார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” தேர்தல் உத்திகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.வன்னியர்களுக்கு 10.5% தனி இட ஒதுக்கீடு மற்றும் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து கடுமையாக விமர்சித்த ராமதாஸ், “முதலமைச்சர் நினைத்தால், இருக்கின்ற தரவுகளை வைத்து ஒரு வாரத்தில் இட ஒதுக்கீடு வழங்க முடியும். ஆனால், தமிழக அரசு, இது மத்திய அரசின் பொறுப்பு என்று தட்டிக்கழிக்கிறது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் வரை போராட்டத்தை தொடருவோம்,” என்று தெரிவித்தார்.

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி, மீண்டும் போராட்டங்கள் நடத்தப்படும் என்று அவர் அறிவித்தார், இது கூட்டத்தில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.ஆனால், கூட்டத்தில் அன்புமணி ராமதாஸின் பெயரை ராமதாஸ் குறிப்பிடவே இல்லை. முன்னதாக, நிர்வாகிகள் அன்புமணி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்த போதிலும், ராமதாஸ் அவை குறித்து எந்தக் கருத்தும் தெரிவிக்காமல் மௌனம் காத்தார். இது, கட்சியின் உட்கட்சி பூசல்கள் மற்றும் தலைமை மாற்றம் குறித்த விவாதங்களை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. ராமதாஸின் உரை, பாமகவின் எதிர்கால அரசியல் பயணத்திற்கு திசைவழி காட்டுவதாக அமைந்தாலும், அன்புமணி குறித்த மௌனம் கட்சித் தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.