த.வெ.க. பற்றியும் விஜய் பற்றியும் விமர்சிக்க மாட்டேன் - சுந்தர் சி

மதுரை மத்தி தொகுதி மக்கள் எனக்கு வெற்றியைக் கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையிருக்கிறது என சுந்தர் சி தெரிவித்துள்ளார்.

Hero Image

சென்னை : 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) சார்பில் புதிய நீதி கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள மதுரை மத்திய சட்டமன்றத் தொகுதியில் திரைப்பட தயாரிப்பாளரும், இயக்குனரும், நடிகருமான சுந்தர் சி போட்டியிடவுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து, இதுவரை செய்தியாளர்களை சந்திக்காமல் இருந்த சுந்தர் சி இன்று முதல் முறையாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் " இதுவரை எத்தனையோ பேட்டிகளை நான் கொடுத்திருக்கிறேன். ஆனால் இன்று முற்றிலும் மாறுபட்ட ஒரு காலகட்டத்தில், அரசியல் பேட்டி கொடுக்கிறேன். இது எனக்கு மிகவும் சந்தோஷமான விஷயம்.

மதுரை மத்திய தொகுதியில் எனக்கு இந்த வாய்ப்பை அளித்த அதிமுக பொதுச்செயலாளர் மதிப்புக்குரிய எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கும், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மதிப்புக்குரிய டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் மதிப்புக்குரிய டிடிவி தினகரன் அவர்களுக்கும், ஜி.கே. வாசன் அவர்களுக்கும், பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்களுக்கும், ஜான் பாண்டி அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

மேலும் அவர் கூறுகையில், “என்னுடைய மூத்த சகோதரரும், புதிய நீதி கட்சியின் தலைவருமான ஏ.சி.எஸ். சண்முகம் சார் என்னை நம்பி இந்த வாய்ப்பை எனக்கு அளித்துள்ளார். கண்டிப்பாக மதுரை மத்திய தொகுதி மக்கள் எனக்கு வெற்றியைத் தருவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இனிமேல் ஒவ்வொரு மாதமும் 15 நாட்கள் என் வாழ்க்கை மதுரையில்தான் இருக்கும் என்று உறுதியாகச் சொல்கிறேன்” என்றார்.

திரைப்படத் துறையில் 30 ஆண்டுகளாக பணியாற்றி பல வெற்றிகளைப் பெற்றுள்ளதாகக் குறிப்பிட்ட சுந்தர் சி, “திரைப்படத் துறையில் நிறைய வெற்றிகளை எனக்கு மக்கள் கொடுத்துள்ளனர். என்னுடைய அடுத்த கட்ட நகர்வு என்பது தேர்தல் முடிவுக்குப் பிறகுதான் முடிவு செய்யப்படும்” என்று தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து, விஜய் குறித்து பேசிய சுந்தர் சி, “விஜய் சார் என் மீது பெரும் மதிப்பும் அன்பும் கொண்டவர். அதேபோல் நானும் அவரை மதிக்கிறேன். என் மனைவி அவரை தம்பியாகக் கருதுகிறார். அவரும் என் மனைவியை அக்கா என்று அன்புடன் அழைக்கிறார். எனவே, எந்த வகையிலும் விஜய் சாரையோ, அவரது கட்சியையோ, அவரது வேட்பாளரையோ விமர்சிக்க நான் தயாராக இல்லை. ஆனால் மதுரை மத்திய தொகுதியைப் பொறுத்தவரை போட்டி இரட்டை இலைக்கும் உதயசூரியனுக்கும் தான் என்று கூறினார்.