"இபிஎஸ் மிரட்டும் தொணியில் பேசுவது அநாகரீக செயல்" – அமைச்சர் மா.சுப்பிரமணியன் கண்டனம்!

ஆம்புலன்சை அனுப்பி பரப்புரைக்கு இடையூறு ஏற்படுத்தியதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியதற்கு ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

m subramanian edappadi palanisamy

வேலூர் :மாவட்டம் அணைக்கட்டு தொகுதியில் “மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற தனது பிரச்சாரப் பயணத்தின் ஒரு பகுதியாக பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி (இபிஎஸ்), தனது பிரச்சாரத்திற்கு வேண்டுமென்றே இடையூறு செய்யும் வகையில் நோயாளி இல்லாத ஆம்புலன்ஸ் அனுப்பப்பட்டதாக குற்றம்சாட்டினார்.

ஆம்புலன்ஸ் வந்ததால் கூட்டத்தில் குழப்பம் ஏற்பட்டதாகவும், இதுபோன்று “ஆயிரம் ஆம்புலன்ஸ் அனுப்பினாலும் மக்களின் ஆதரவை மாற்ற முடியாது” என்றும் கூறிய அவர், மீண்டும் இப்படி நோயாளி இல்லாமல் ஆம்புலன்ஸ் வந்தால், “ஓட்டுநரே நோயாளியாக செல்ல வேண்டிய நிலை ஏற்படும்” என்று மிரட்டும் தொனியில் பேசினார்.எடப்பாடி பழனிசாமியின் இந்தக் குற்றச்சாட்டுக்கு கடும் கண்டனம் தெரிவித்த தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், அவரது பேச்சு அநாகரீகமானது என்று விமர்சித்தார்.

“ஆம்புலன்ஸ் வரும் வழியில் கூட்டத்தை நடத்திவிட்டு, தான் வரும் வழியில் ஆம்புலன்ஸ் விடப்படுவதாக இபிஎஸ் சொல்கிறார். ‘அரண்டவன் கண்ணுக்கு மிரண்டதெல்லாம் பேய்’ என்பதுபோல, ஆம்புலன்ஸைப் பார்த்தாலே அவருக்கு வேறு ஏதோ ஞாபகம் வருகிறது போல. ஒரு முன்னாள் முதல்வர் மிரட்டும் தொனியில் பேசுவது அநாகரீக செயல்,” என்று அவர் கூறினார். ஆம்புலன்ஸை வேண்டுமென்றே அனுப்பியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு அடிப்படையற்றது என்றும், இது அரசியல் உள்நோக்கத்துடன் பரப்பப்படுவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இந்த விவகாரத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் தனது மறுப்பைத் தெரிவித்து, எடப்பாடியின் குற்றச்சாட்டுக்கு விளக்கமளித்தார். “நோயாளி இல்லாமல் ஆம்புலன்ஸ் அனுப்பப்பட்டதாகக் கூறுவது உண்மையல்ல. அணைக்கட்டு மருத்துவமனைக்கு நோயாளியை ஏற்றிச் செல்வதற்காகவே ஆம்புலன்ஸ் சென்றது,” என்று அவர் தெளிவாகக் கூறினார். பிரச்சாரத்திற்கு இடையூறு செய்யும் நோக்கத்தில் ஆம்புலன்ஸ் அனுப்பப்பட்டதாகக் கூறப்படுவது தவறான குற்றச்சாட்டு என்று ஓட்டுநர் வலியுறுத்தினார்.