ஏற்கெனவே ஆர்டர் செய்திருந்த சோஃபா தான் - விசிக தலைவர் திருமாவளவன் விளக்கம்!

ஏற்கெனவே ஆர்டர் செய்திருந்த சோஃபா தான் கட்சி அலுவலகத்துக்கு வந்தது என விசிக தலைவர் திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.

Hero Image

சென்னை : தவெக அரசுக்கு ஆதரவு அளிப்பதில் ஏற்பட்ட காலதாமதம் மற்றும் “சோபா” சர்ச்சை தொடர்பாக விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி. விரிவான விளக்கம் அளித்துள்ளார்.

சிவி சண்முகம் பேசியது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,“அது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அங்கு என்ன நடந்தது? அவர்களுக்குள் என்ன உரையாடல் நடந்தது? எதுவும் நமக்குத் தெரியாது. எனக்கு நெருங்கிய சில நண்பர்கள் மூலம் சில பேச்சுகள் நடைபெறுவதாக தகவல் வந்தது. அதற்குப் பிறகு என்ன நடந்தது என்பது எங்களுக்குத் தெரியாது.

நாங்கள் இடதுசாரி கட்சிகள் எடுக்கும் முடிவுக்காகவே காத்திருந்தோம். எட்டாம் தேதி காலையில் அவர்களின் செயற்குழு, மாலையில் மாநிலக் குழு கூட்டங்கள் நடைபெற்றன. அவர்கள் முடிவெடுத்த பிறகு நாங்கள் எங்கள் உயர்நிலைக் குழுவைக் கூட்டி முடிவு எடுப்போம் என முன்பே தெரிவித்திருந்தோம்.அன்று மாலை 5 மணிக்கு ஜூம் மூலம் உயர்நிலைக் குழு கூட்டத்தை நடத்தினோம்.

ஆதரவு அளிப்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அமைச்சரவையில் இடம்பெற வேண்டுமா என்பதில் இரு கருத்துகள் இருந்தன. இறுதியில் தலைவர் எடுக்கும் முடிவுக்கு நாங்கள் கட்டுப்படுவோம் என முடிவு செய்தோம்.கூட்டம் முடிந்த பிறகு பொதுச் செயலாளர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் வருவதற்கு சில நேரம் ஆனது. வன்னி அரசு தனது தந்தை நினைவிடத்திற்குச் சென்றிருந்தார். மற்றொரு எம்.எல்.ஏ. வேறு இடத்தில் தங்கியிருந்தார்.

ஆவணங்கள் தயாரிப்பு, கையெழுத்து உள்ளிட்ட நடைமுறைகளுக்கு நேரம் தேவைப்பட்டது. இதனால்தான் சிறிது தாமதம் ஏற்பட்டது.சோபா விளக்கம்‘ஏற்கெனவே ஆர்டர் செய்திருந்த சோபாதான் கட்சி அலுவலகத்துக்கு வந்தது. நீங்கள் அந்த நேரத்தில் கேமராவுடன் உள்ளே வந்துவிட்டீர்கள்’ என்று திருமாவளவன் கூறினார்.

மேலும், “எங்களைச் சுற்றி பெரிதாக எதுவும் நடக்கவில்லை. சிலர் திட்டமிட்டு அவதூறு பரப்புகிறார்கள். எங்கள் நடவடிக்கை முழுக்க வெளிப்படையானது” என்றும் அவர் வலியுறுத்தினார்.திருமாவளவனின் இந்த விளக்கம், தவெக அரசுக்கு ஆதரவு அளிப்பதில் ஏற்பட்ட காலதாமதம் மற்றும் “சோபா” சர்ச்சை தொடர்பான விமர்சனங்களுக்கு அளிக்கப்பட்ட முக்கிய பதிலாகப் பார்க்கப்படுகிறது.