கரூர் துயரம் : "பேசக்கூடிய மனநிலையில் இல்லை"...ஆதவ் அர்ஜுனா பேட்டி!

தற்போது எதையும் பேசக்கூடிய மனநிலையில் இல்லை என ஆதவ் அர்ஜுனா வேதனையுடன் பேசியுள்ளார்.

aadhav arjuna karur issue

கரூர்:தவெக தலைவர் விஜயின் கரூர் வேலுச்சாமிபுரம் பிரச்சாரக் கூட்டத்தில் (செப்டம்பர் 27, 2025) ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா முதல் முறையாக செய்தியாளர்களைச் சந்தித்தார். இதற்கு முன், அவரது ‘புரட்சி வேண்டும்’ என்ற சமூக வலைதள பதிவு, மகாகவி பாரதியின் வார்த்தைகளைப் பயன்படுத்தியதாக பலரும் கண்டனம் தெரிவித்து சர்ச்சையை கிளப்பியிருந்தது.

கலவரத்தை தூண்டும் வகையில் அவர் பதிவு செய்துவிட்டு அதனை நீக்கியது பெரிய அளவில் பேசுபொருளாக வெடித்துள்ளது. ஏற்கனவே, திமுக எம்பி கனிமொழி அவருடைய பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து இருந்தார். அவரை தொடர்ந்து எம்பி ஆர்ராசா ” வன்முறையை தூண்டும் வகையில் பதிவிட்ட ஆதவ் அர்ஜுனாவை விஜய் கண்டிக்காமல், கட்சியை விட்டு நீக்காமல் தன்னுடன் வைத்திருப்பது ஏன்? இது இந்தியாவுக்கும், தமிழ்நாட்டுக்கும் நல்லதா?” என காட்டத்துடன் கேள்வி எழுப்பி இருந்தார்.

இப்படியான சூழலில், சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த ஆதவ் அர்ஜுனா, “தற்போது எதையும் பேச மனநிலையில் இல்லை. 41 பேர் உயிரிழந்ததால் மிகுந்த மன வேதனையில் இருக்கிறோம். இந்த துயரம் எங்களை உலுக்கியுள்ளது,” என்று உருக்கமாகக் கூறினார். விஜய் கரூருக்கு எப்போது செல்கிறார், அடுத்த கட்ட நடவடிக்கை என்ன போன்ற கேள்விகளுக்கு, “கூடிய விரைவில் கரூரில் பாதிக்கப்பட்டவர்களை சந்திப்போம். இப்போது மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம்,” என்று பதிலளித்தார்.

ஆதவ் அர்ஜுனாவின் இந்த பேட்டி, சம்பவத்திற்குப் பிறகு தவெகவின் முதல் அதிகாரப்பூர்வ பதிலாக அமைந்துள்ளது.மேலும், கரூர் துயரச் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட தவெக நிர்வாகிகள் மதியழகன், பவுன்ராஜ் ஆகிய இருவரையும் 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க கரூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.