சென்னை : சமூக சேவை மற்றும் மக்கள் பங்களிப்பை மையமாகக் கொண்டு, ‘மக்கள் மேடை (People's Movement) என்ற புதிய மக்கள் இயக்கத்தை தொடங்கியுள்ளதாக லதா ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து வெளியிட்டுள்ள வீடியோவில், “மக்கள் மேடை மற்றும் Citizens Platform அமைப்புகளுடன் இணைந்து, தமிழ்நாட்டிற்காக பணியாற்ற விரும்பும் அனைத்து தரப்பு மக்களையும் வரவேற்கிறோம். மாற்றத்தை விரும்பும் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து சமூக முன்னேற்றத்திற்காக செயல்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “இந்த இயக்கத்தில் சாதாரண பொதுமக்கள் முதல் ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள் வரை யார் வேண்டுமானாலும் இணையலாம். ஒவ்வொருவரிடமும் அனுபவம், திறமை, யோசனைகள் மற்றும் சமூகத்திற்கு பங்களிக்க வேண்டும் என்ற மனப்பான்மை உள்ளது. அந்த சக்திகளை ஒரே தளத்தில் இணைப்பதே மக்கள் மேடையின் நோக்கம்” என்றார்.
ஓய்வுபெற்ற ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், ஆசிரியர்கள், அஞ்சல் துறை ஊழியர்கள், ராணுவ அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அனுபவம் பெற்றவர்கள் இந்த இயக்கத்துடன் இணைந்து தங்களது அனுபவங்களை பகிரலாம் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.
“தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் மக்களுக்காக பணியாற்றக்கூடிய உள்ளூர் தலைவர்களை உருவாக்க வேண்டும். மக்களிடம் உள்ள திறமைகள், யோசனைகள் மற்றும் சேவை மனப்பான்மையை சமூக நலனுக்காக பயன்படுத்த வேண்டும். அதற்கான தளமாக மக்கள் மேடை செயல்படும்” என்று லதா ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
தமிழகத்தில் சமூக மாற்றம் மற்றும் மக்கள் பங்கேற்பை வலுப்படுத்தும் நோக்கில் இந்த புதிய மக்கள் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளதாகவும், சமூக நலன் சார்ந்த பல்வேறு ஆக்கப்பூர்வமான பணிகளில் பொதுமக்கள் இணைந்து செயல்படலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். லதா ரஜினிகாந்தின் இந்த அறிவிப்பு அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.
