அண்ணாமலை விலகலால் கட்சிக்கு ஒரு பாதிப்பும் இல்லை - நயினார் நாகேந்திரன் அதிரடி!

இன்று நேற்று ஆரம்பித்த கட்சி அல்ல, சித்தாந்தத்தின் அடிப்படையில் இயங்கும் கட்சி என்றும் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

Hero Image

சென்னை : பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகி புதிய அரசியல் பயணத்தை அறிவித்துள்ள நிலையில், அதுகுறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியுள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பாரதிய ஜனதா கட்சி என்பது இன்று அல்லது நேற்று தொடங்கப்பட்ட கட்சி அல்ல. இது ஒரு தனிநபரை மையமாகக் கொண்ட கட்சி அல்ல; சித்தாந்த அடிப்படையில் செயல்படும் தேசிய இயக்கம். எனவே, அண்ணாமலை விலகியதால் கட்சிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது” என்று தெரிவித்தார்.

மேலும், “தமிழ் மற்றும் தமிழர்களின் நலனில் பாஜக எப்போதும் அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி எந்த நாட்டிற்கு சென்றாலும் தமிழ் மொழியின் பெருமை, தமிழ் மக்களின் சிறப்பு குறித்து பெருமையாக பேசி வருகிறார். சமீபத்தில் கூட வரலாற்று சிறப்புமிக்க தமிழ் செப்பேடுகளை மீட்டுக் கொண்டு வந்தது மத்திய அரசுதான். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் மத்திய அரசு தொடர்ந்து முக்கியத்துவம் அளித்து வருகிறது” என்றார்.

அண்ணாமலை புதிய கட்சி தொடங்க உள்ளதாக கூறப்படும் தகவல் குறித்து கருத்து தெரிவித்த நயினார் நாகேந்திரன், “ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் புதிய கட்சி அல்லது இயக்கத்தை தொடங்கலாம். அது அவர்களின் அடிப்படை உரிமை. அதில் எங்களுக்கு எந்த எதிர்ப்பும் இல்லை” என்று கூறினார்.

தேசிய கட்சியான பாஜக, பிராந்திய உணர்வுகளுக்கும் மாநிலங்களுக்கும் போதிய முக்கியத்துவம் அளிப்பதில்லை என்ற அண்ணாமலையின் குற்றச்சாட்டை மறுத்த அவர், “அது முற்றிலும் தவறான குற்றச்சாட்டு. பாஜக பிராந்திய கட்சிகளுக்கு முக்கியத்துவம் தருகிறதா இல்லையா என்பதல்ல முக்கியம். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக என்ன செய்கிறது என்பதுதான் முக்கியம்” என்றார்.

தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு வழங்கி வரும் திட்டங்களை சுட்டிக்காட்டிய அவர், “தேசிய நெடுஞ்சாலைகள், விமான நிலைய விரிவாக்கங்கள், பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் என மத்திய அரசு தொடர்ந்து நிதி ஒதுக்கி வருகிறது. ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும் பல அத்தியாவசிய பொருட்களுக்கும் மத்திய அரசின் பங்களிப்பு உள்ளது. தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு மத்திய அரசு தொடர்ந்து ஆதரவாக செயல்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார்.

அண்ணாமலையின் விலகல் குறித்து அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு நிலவி வரும் நிலையில், பாஜக தரப்பில் எந்த பாதிப்பும் இல்லை என நயினார் நாகேந்திரன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை விலகலால் கட்சிக்கு ஒரு பாதிப்பும் இல்லை - நயினார் நாகேந்திரன் அதிரடி!