சென்னை:தந்தை பெரியாரின் 51வது நினைவு நாள் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில், அரசியல் தலைவர்கள் பலரும் பெரியாரின் மாலை அணிவித்து, மலர்கள் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில், பெரியாரின் நினைவு தினத்தையொட்டி, அவரது படத்திற்கு விஜய் மரியாதை செலுத்தினார். சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக அலுவலகத்தில் பெரியார் உருவப்படத்திற்கு மலர்தூவி விஜய் மரியாதை செலுத்தினார்.
இது தொடர்பாக தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில், “சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகளை அகற்றி, சமத்துவம் மலர, பெண்களுக்குச் சமஉரிமை கிடைக்க வாழ்நாள் முழுவதும் பெரும்பாடுபட்ட சுயமரியாதைச் சுடர் எங்கள் கொள்கைத் தலைவர் தந்தை பெரியாரின் 51ஆவது நினைவு தினத்தையொட்டி, எமது அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினேன்.
அறிவார்ந்த, சமத்துவச் சமுதாயம் அமைக்க, தந்தை பெரியார் வழிகாட்டிய உண்மையான சமூக நீதிப் பாதையில் பயணிக்க அனைவரும் உறுதியேற்போம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
unknown nodeஇதற்கு முன்னதாக, விஜய் செப்டம்பர் மாதம் பெரியார் பிறந்த நாளுக்கு சென்னை பெரியார் திடலுக்கு சென்று அவரது சிலைக்கு மரியாதை செலுத்தினார். இதன் பின்னர், தவெக கட்சியின் முதல் மாநாட்டின் போது, கட்சியின் பெரியாரை கொள்கை தலைவராக அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
