“என்னை கொலை செய்ய சதி?” மதுரை ஆதீனம் பரபரப்பு குற்றசாட்டு!
தனக்கு நேற்று நடந்த கார் விபத்தை குறிப்பிட்டு பேசிய மதுரை ஆதீனம், தன்னை கொலை செய்ய சதி செய்துவிட்டார்கள் என சைவ சித்தாந்த மாநாட்டில் குறிப்பிட்டு பேசினார்.

சென்னை : இன்று (மே 3) முதல் மே 5 வரையில் சென்னை காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக வளாகத்தில் சைவ சித்தாந்த மாநாடு தருமபுரம் ஆதீனம் தலைமையில் நடைபெறுகிறது. இதில் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். மதுரை ஆதீனம் உள்ளிட்ட பல்வேறு மதத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் பேசிய மதுரை ஆதீனம், தன்னை கொலை செய்ய சிலர் சதி செய்துவிட்டார்கள் என பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்தார். சைவ சிந்தாந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நேற்று மதுரையில் இருந்து வாகனத்தில் புறப்பட்ட மதுரை ஆதீனத்தின் கார், விழுப்புரம் அருகே ரவுண்டானா பகுதியில் வரும் போது அந்த கார் மற்றொரு கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் நல்வாய்ப்பாக மதுரை ஆதீனத்திற்கு எந்த காயமும் ஏற்படவில்லை. இந்த விபத்தை குறிப்பிட்டு தான் மதுரை ஆதீனம் பேசுகையில், ” நான் இங்கு வந்துள்ளேன். நேற்று கூட ஒரு சம்பவம் நடந்துவிட்டது. என்னை கொலை செய்ய சதி செய்துவிட்டார்கள். தருமை ஆதினத்தின் ஆசியால் நான் காப்பாற்றப்பட்டுள்ளேன். மீனாட்சி சுந்தரேஸ்வரர் தான் என்னை காப்பாற்றினார். ஒரு நல்ல காரியத்தை இப்போது எங்கும் பேச முடிவதில்லை.” என அவர் பேசினார்.
தன்னை கொலை செய்ய சதி என மதுரை ஆதீனம் குறிப்பிட்டது மேடையில் சிறுது சலசலப்பை ஏற்படுத்திவிட்டது. இந்த விபத்து குறித்து தருமபுரம் ஆதீனம் நேற்று தனது சமூக வலைதள பக்கத்தில், இந்த விபத்து திட்டமிட்ட சதி என்று குறிப்பிட்டு இருந்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025