எத்தனை முனை போட்டியாக இருந்தாலும் வெல்லப்போவது மு.க.ஸ்டாலின் தான் - சேகர்பாபு பேட்டி!

தொகுதி முழுவதும் திமுகவுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

Hero Image

சென்னை : தமிழக சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ள அமைச்சர் சேகர்பாபு, துறைமுகம் சட்டமன்றத் தொகுதியில் பேசுகையில், “தொகுதி முழுவதும் நல்ல வரவேற்பு இருக்கிறது. எத்தனை முனை போட்டியாக இருந்தாலும் வெல்லப் போவது மு.க.ஸ்டாலின் தான்” என்று உறுதியாகக் கூறினார்.

துறைமுகம் தொகுதியில் பிரச்சாரம் செய்த அமைச்சர் சேகர்பாபு, மக்களின் வரவேற்பு குறித்து பேசுகையில்,“பார்க்கின்ற திசையெல்லாம் தொகுதியுடைய வாக்காளர்கள் நம்பிக்கை தருகின்ற வகையில் எங்கள் வாக்கு திராவிட மாடல் நாயகன் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் சின்னமான உதயசூர்யன் தான் என்று நம்பிக்கை ஏற்படுத்துவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அவர்களாகவே வரவேற்கும் வகையில் ஒவ்வொருவரும் அவரவர்கள் எண்ணங்களில் உதித்த அந்தச் சிறிய சிறிய திட்டங்களின்படி வரவேற்பளிப்பது வேட்பாளருக்கு களைப்பைப் போக்குவது உற்சாகத்தைத் தருகிறது” என்றார்.

தொகுதியில் தான் செய்த பணிகள் குறித்து விரிவாகப் பேசிய அவர்,“துறைமுகம் சட்டமன்றத் தொகுதியைப் பொறுத்த அளவில் ஒரு ஐந்து ஆண்டுகள் சட்டமன்ற எதிர்க்கட்சியாகப் பணியாற்றியிருக்கிறேன். ஐந்து ஆண்டுகள் ஆளுங்கட்சியில் பணியாற்றியிருக்கிறேன். அதுவும் அமைச்சராக. எதிர்க்கட்சியில் பணியாற்றுகின்றபோது போராடிப் பெற்ற திட்டங்கள் சில என்றால், ஆளுங்கட்சியில் திட்டமிட்டு பெறப்பட்ட திட்டங்கள் பல.எதிர்த்து களத்தில் நிற்பவர்கள் வசைபாடுவதைத் தவிர்த்து உருப்படியான திட்டங்களை எதுவும் சொல்வதில்லை மக்களிடத்தில். என்ன செய்தார்கள் இதுவரை? இந்த பத்து ஆண்டுகள் அல்ல. ஒரு கால் நூற்றாண்டு காலமாக இந்தத் துறைமுகத்தில் நான் அறிமுகமானவன்.

பல்வேறு கட்சிப் பொறுப்புகளில் பொறுப்பு வகித்து வருபவன். அவர்கள் இதற்கு முன்னால் துறைமுகத்திற்காக, துறைமுக மக்களுக்காக என்ன செய்தார்கள்?எதிர்க்கட்சி, ஆளுங்கட்சி என்ற பத்து வருடங்கள் நான் இங்கே சட்டப்பேரவை உறுப்பினராகப் பணியாற்றுகின்றபோது கொரோனா பாதிப்பு என்றாலும் சரி, வெள்ள பாதிப்பு என்றாலும் சரி, இயற்கை பேரிடர் எது வந்தாலும் இந்த மக்களிடையே மக்களின் ஒருவனாக நின்று களத்திலே பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.

ஜாதி மதங்களுக்கு அப்பாற்பட்டு, இஸ்லாமியர்கள் கொண்டாடுகின்ற ரம்ஜான், பக்ரீத், கிறிஸ்தவர்கள் கொண்டாடுகின்ற கிறிஸ்துமஸ், இந்துக்கள் கொண்டாடுகின்ற எந்தப் பண்டிகையாக இருந்தாலும், அந்தந்த பண்டிகை காலங்களில் அவரவர்களுக்கு என்னால் முடிந்த அளவுக்கு பரிசுகளை தொடர்ந்து வழங்கி வந்திருக்கிறேன்.துறைமுகத் தொகுதியிலே எங்களால் துவக்கப்பட்ட தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் இதுவரை ஆறு ஆயிரம் மாணவச் செல்வங்கள் தையல் பயிற்சி, களிணி பயிற்சி, அழகு கலை பயிற்சியை முடித்திருக்கின்றார்கள்.

இந்தப் பயிற்சி கூடங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. உலகத் தரத்திலே அம்மன் கோவில் தெருவிலே ஒரு படைப்பகத்தை உருவாக்கிக் காட்டியிருக்கிறோம். எதிர்த்து ஏடியம் பேசி குறை சொல்பவர்கள் அந்தப் படைப்பகத்தைப் பார்த்துட்டு வரச் சொல்லுங்கள்.இந்தத் தொகுதியில் மக்களுடைய ஆதரவு, மக்களுடைய வரவேற்பு மிகுந்துள்ளது.

மக்கள் எங்களை குடும்பக் கட்சி என்று சொல்வார்கள். மக்கள் எங்களை குடும்பமாகத்தான் பார்க்கின்றார்கள். தமிழக மக்களே திமுக குடும்பம்தான் என்பதை இந்தத் தேர்தலில் நிரூபித்துக் காட்டுவோம்.எத்தனை முனை போட்டிகள் இருந்தாலும் வென்று எடுப்பவர், மீண்டும் வருபவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்ற குரல் மே மாதம் கவர்னர் மாளிகையிலே ஒலிக்கும்… ஒலிக்கும்… ஒலிக்கும்” என்று உற்சாகமாகப் பேசினார்.

எத்தனை முனை போட்டியாக இருந்தாலும் வெல்லப்போவது மு.க.ஸ்டாலின் தான் - சேகர்பாபு பேட்டி!