சென்னை :பாமக நிறுவனர் ராமதாஸ், நாளை புதுச்சேரி அருகே பட்டானூரில் உள்ள சங்கமித்ரா அரங்கில் காலை 10 மணிக்கு திட்டமிட்டபடி சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என உறுதிப்படுத்தியுள்ளார். இந்தக் கூட்டம் ரத்து செய்யப்பட்டதாக பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும், கட்சி நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.
பாமக (பாட்டாளி மக்கள் கட்சி) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரது மகனும் கட்சியின் தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் இடையே நீண்ட நாட்களாக கருத்து வேறுபாடுகளும் மோதல் போக்கும் நீடித்து வருகின்றன. இந்த நிலையில், நேற்றைய தினம் அன்புமணி ராமதாஸ் தனது குடும்பத்துடன் விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்திற்கு சென்றது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த வருகையின் முக்கிய காரணம், ராமதாஸின் மனைவியும் அன்புமணியின் தாயாருமான சரஸ்வதியின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அன்புமணி தனது தாயாருடன் கேக் வெட்டி பிறந்தநாளைக் கொண்டாடினார். அன்புமணி தனது தாயாரிடம் ஆசி பெற்று, குடும்ப உறுப்பினர்களுடன் சில மணி நேரம் உரையாடினார். இரவு 8:45 மணியளவில் அவர் தைலாபுரத்திலிருந்து சென்னைக்கு புறப்பட்டுச் சென்றார்.
அன்புமணியின் வருகையின்போது ராமதாஸ் அங்கு இருந்ததாகவும், இருவரும் சந்தித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இந்த சந்திப்பு சுமுகமாக இருக்கவில்லை என்று ராமதாஸ் இன்று செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்து கொண்டார்.
இது தொடர்பாக அவர் பேசுகையில், ”நேற்று தைலாபுரம் இல்லத்திற்கு வந்த அன்புமணி வணக்கம் சொன்னார். நானும் வணக்கம் என்றேன். அதைத் தவிர வேறு எந்தப் பேச்சும் இல்லை” என்றார். மேலும், அன்புமணியுடன் சமாதானம் ஏற்பட்டதாகக் கூறப்படுவது “பொய்” என்று ராமதாஸ் திட்டவட்டமாக மறுத்தார்.
இறுதியில், நாளை நடைபெறவிருக்கும் பாமகவின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என்று அவர் அறிவித்தார். இந்தக் கூட்டத்தில் முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என்றும், குறைந்தபட்சம் 4,000 பேர் பங்கேற்பார்கள் என்றும் கூறினார்.
