மின்மினி பூச்சிகள் எல்லாம் வெளிச்சம் தராது...விஜய்யை சீண்டிய செல்லூர் ராஜு!

மின்மினி பூச்சிகள் எல்லாம் வெளிச்சம் தராது. உண்மையான வெளிச்சத்தை எடப்பாடி பழனிசாமிதான் தருவார் என செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

sellur raju vijay

சென்னை :மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சரும் கட்சியின் மூத்த தலைவருமான செல்லூர் ராஜூ, தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜய்யை கடுமையாக கிண்டலடித்தார். “மின்மினி பூச்சிகள் எல்லாம் வெளிச்சம் தராது. உண்மையான வெளிச்சத்தை எடப்பாடி பழனிசாமிதான் தருவார். களத்தில் பணியாற்றும் எங்களுக்குதான் தெரியும் யாருக்கு யார் போட்டி என்று” என்று கூறினார்.

விஜய்யின் ரசிகர் செல்வாக்கை மின்மினி பூச்சியோடு ஒப்பிட்டு அவர் பேசினார்.“அமிதாப்பச்சன் வந்தால்கூட கூட்டம் கூடும். நம்மை ஆளக்கூடியவர் யார் என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும்” என்று தெரிவித்த செல்லூர் ராஜூ, எடப்பாடி பழனிசாமியை உண்மையான தலைவர் என்று புகழ்ந்தார்.

கொரோனா காலம், புயல், வறட்சி உள்ளிட்ட இடர்காலங்களில் எடப்பாடி ஆட்சி மக்களுக்கு துணையாக இருந்ததாக அவர் குறிப்பிட்டார். ஏழை எளிய மக்களின் கஷ்டங்களை புரிந்துகொண்டு நல்லாட்சி வழங்கியவர் எடப்பாடி என்று அவர் பாராட்டினார். தமிழ்நாடு அமைதிப்பூங்காவாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்திய செல்லூர் ராஜூ, போதை கலாச்சாரம் இருக்கக் கூடாது என்றார்.

குழந்தைகளில் இருந்து பாட்டி வரை அனைவருக்கும் பாதுகாப்பு வேண்டும் என்று கூறிய அவர், ஊழலில்லா, சமமான ஆட்சியை எடப்பாடி கொடுப்பார் என்று உறுதியளித்தார். போதைப்பொருள் புழக்கம், சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்டவற்றை திமுக ஆட்சியின் தோல்வியாக சுட்டிக்காட்டினார்.புரட்சித் தலைவி அம்மா ஆட்சியை பாராட்டிய செல்லூர் ராஜூ, “அம்மா கொடுத்ததை போல மக்களுக்கான ஆட்சியை எடப்பாடி கொடுத்தார். நாடே பாராட்டியது. விலைவாசி ஏற்றம் இல்லை” என்று கூறினார். எடப்பாடி தன்னைத்தானே பாராட்டாதவர் என்று அவர் புகழ்ந்தார். அதிமுக ஆட்சியில் மக்கள் நலத்திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டதாக அவர் நினைவுகூர்ந்தார்.