ஸ்டாலினை சந்தித்த OPS… திமுகவில் ஐக்கியமா?

சட்டமன்ற வளாகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு

o panneerselvam AND CM

சென்னை :தமிழ்நாடு சட்டமன்ற வளாகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் நேரில் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது ஓ.பி.எஸ்., ஸ்டாலினுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். இது திடீரென நடந்த சந்திப்பாக இருந்தாலும், அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.ஓ. பன்னீர்செல்வம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடனான கருத்துவேறுபாடு காரணமாக கட்சியிலிருந்து பிரிந்து, ‘அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகம்’ என்ற அமைப்பு மூலம் தனியாக செயல்பட்டு வருகிறார்.

அவரது ஆதரவாளர்கள் சிலர் ஏற்கனவே திமுக மற்றும் தவெகவில் இணைந்துள்ளனர். வைத்திலிங்கம் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து ஜனவரி 21ஆம் தேதி திமுகவில் இணைந்தார். மனோஜ் பாண்டியன் திமுகவிலும், ஜே.சி.டி. பிரபாகர் தவெகவிலும் இணைந்தனர்.கூட்டணி முடிவு தொடர்பாக ஓ.பி.எஸ். காலதாமதம் செய்வதால், அவரது ஆதரவாளர்கள் ஒவ்வொருவராக மாற்று கட்சிகளில் இணைந்து வருவதாகக் கூறப்படுகிறது.

மறுபுறம், ஓ.பி.எஸ். தனிமரமாக இருந்தாலும், என்டிஏ கூட்டணியில் இணைய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் உள்ளன. இந்த சூழலில் திடீரென முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்தது புதிய ஊகங்களை தோற்றுவித்துள்ளது.இருப்பினும், இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது மட்டுமே என்றும், அரசியல் இணைப்பு குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரேமலதா விஜயகாந்த் திமுக கூட்டணியில் இணைந்த பிறகு, ஓ.பி.எஸ்.வும் திமுகவில் இணைவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்திருந்தது. ஆனால் இந்த சந்திப்பு அரசியல் உத்தியா அல்லது மரியாதை சந்திப்பா என்பது இன்னும் தெளிவாகவில்லை. 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் இந்த சந்திப்பு பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.