பாஜக, திமுக நாடகத்தை மக்கள் ஏற்க மாட்டார்கள் – விஜய் அறிக்கை.!
பாஜக, திமுக நாடகத்தை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்று தவெக தலைவர் விஜய் அறிக்கை ஒன்றை வெளிட்டுள்ளார்.

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வின் அரசியல் நாடகங்களை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள் என விமர்சித்து எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார். அவரது இந்தக் கருத்து, தற்போதைய அரசியல் சூழலில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” 75 ஆண்டுகளைக் கடந்த கட்சி என்றும் தமிழ், தமிழர் அடையாளம் என்றாலே அது தங்களுக்கு மட்டுமே உரியது என்பது போலவும் பொய்யாக மார் தட்டிக்கொள்ளும் தற்போதைய ஆளும் கட்சியான தி.மு.க.. தமிழர் பெருமையான சோழப் பேரரசர்களுக்கு உரிய மரியாதையை முன்பே முழுமையாக அளித்திருந்தால் இப்போது தமிழர்களுக்கு எதிராக இருக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசு இதைக் கையில் எடுத்திருக்காது.
இதையெல்லாம் செய்யாமல், ஒன்றியப் பிரதமர் வருகை தமிழ்நாட்டுக்குப் பெருமை என்று வாஞ்சையாகச் சொல்லிச் சிலாகித்தது இந்த வெற்று விளம்பர மாடல் தி.மு.க. அரசு. மறைமுகமாகப் பா.ஜ.க.வும் தி.மு.க.வும் ஓரணியில் இருக்கும் கபடதாரிகளாக இணைந்து நடத்தும் அரசியல் ஆதாய நாடகத்தை இனியும் தமிழக மக்கள் ஏற்கமாட்டார்கள். தமிழகத்தை ஓரவஞ்சனையோடு ஒதுக்கும் பிரதமர் சோழர்கள் பற்றி பாடம் எடுக்கிறார். தமிழர் கட்சி என்று மார்தட்டும் திமுக முன்பே சோழர்களுக்கு மரியாதை செய்திருக்க வேண்டும்.
சேர, சோழ, பாண்டியர்கள் ஆட்சியின் தொன்மப் பெருமைகளைப் பறைசாற்றும் பிரமாண்டமான அருங்காட்சியகம் ஒன்று சென்னையில் அமைக்கப்பட வேண்டும் என்று கடந்த ஆண்டிலேயே தவெக தீர்மானம் நிறைவேற்றியது. ஆனால், பவள விழாக் கண்ட இந்தத் திமுக, பாஜக முதுகிற்குப் பின்னால் பதுங்கிக் கொண்டு பம்முகிறது.
கொள்கை. கோட்பாடுகளுடன் அறிஞர் அண்ணா ஆரம்பித்த இயக்கம், இன்று அனைத்திலும் சமரசம் செய்துகொண்டு, தமிழுக்கும் தமிழர்களுக்கும் தமிழ்நாட்டிற்கும் எதிராக உள்ள பா.ஜ.க.விடம் சரணடைந்து கிடப்பதுதான் வேடிக்கை. இல்லை இல்லை. இதுதான் தி.மு.க. தலைமைக் குடும்பத்தின் வாடிக்கை” என்று கடுமையாக விமர்சித்து பதிவிட்டுள்ளார்.
— TVK Vijay (@TVKVijayHQ) July 28, 2025