நாகையில் நாளை விஜய் பரப்புரை.., மின்சாரத்தை நிறுத்தி வைக்க கோரி மனு.!

விஜய் செல்லும் வழியில், அவர் செல்லும் போது உயர் மின் அழுத்தக் கம்பிகளில் மின்சாரத்தை நிறுத்தி வைக்க த.வெ.க. மாவட்டச் செயலாளர் மின்சார வாரியத்தில் மனு கொடுத்துள்ளார்.

TVK Vijay

நாகை :நாகையில் நாளை (செப்டம்பர் 20, 2025) தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தனது பரப்புரைப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். இந்த பயணத்திற்கு காவல்துறையால் புத்தூர் ரவுண்டானா அருகே பரப்புரை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மொத்தம் ஏழு இடங்களுக்கு அனுமதி கோரப்பட்டபோதும், இந்த ஒரு இடத்திற்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், நாகை மாவட்டச் செயலாளர் மா.சுகுமார், நாளை (செப்டம்பர் 20) நாகையில் நடைபெறவுள்ள விஜய்யின் பரப்புரை நிகழ்ச்சியின்போது, வாஞ்சூர் ரவுண்டானா பகுதியிலிருந்து புத்தூர் அண்ணா சிலை வரையிலான பகுதியில் மின்சாரத்தை துண்டிக்குமாறு மின்சாரப் பொறியாளருக்கு கோரிக்கை மனு அளித்துள்ளார்.

இந்தக் கோரிக்கை, பிரச்சாரத்தின்போது ரசிகர்கள் மரங்கள் மற்றும் கட்டிடங்களில் ஏறுவதால் ஏற்படக்கூடிய அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் நோக்கில் அளிக்கப்பட்டுள்ளது.

அந்த மனுவில், ”எங்கள் கழகத் தலைவர் விஜய் சாலை மார்க்கமாக வாஞ்சூர் ரவுண்டாணா, தொடங்கி நாகூர், தெற்கு பால்பண்ணைச்சேரி, வடகுடி சாலை வழியாக கிழக்கு கடற்கரை சாலையை அடைந்து அவ்வழியாக பரப்புரை செய்யயுள்ள புத்தூர் அண்ணாசிலை அருகில் வருகை புரிந்து மக்களை சந்தித்து உரையாற்றயுள்ளார்.

இவ்வழித்தடத்தில் உள்ள உயர் மின்னழுத்த கம்பி உள்ளதால் தளபதியின் விஜய் அவர்களின் நிகழ்வு தொடங்கி முடியும் வரை அவ்வழியில் உள்ள வழி தடங்களில் மின் நிருத்தம் செய்து தரும்படிபயும் அல்லது மின் ஊழியர்களை நியமித்து பொதுமக்களுக்கு தக்க பாதுகாப்பு வழங்கிடுமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.