வீடு புகுந்து குழந்தை கடத்தல்… 2 மணி நேரத்தில் மீட்ட போலீஸ்!

குடியாத்தத்தில் கடத்தப்பட்ட நான்கு வயது குழந்தை திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் அடுத்த தேவிகாபுரம் என்ற இடத்தில் காவல் துறையினரால் குழந்தை மீட்கப்பட்டது.

Kidnapped - child

வேலூர் :வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில், காமாட்சி அம்மன் பேட்டை பகுதியில் வசிக்கும் வேணு-ஜனனி தம்பதியின் 4 வயது குழந்தை பட்டப்பகலில் கடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேணு தனது குழந்தையை பள்ளியில் இருந்து மதிய உணவு இடைவேளையில் அழைத்து வந்தபோது, கர்நாடக பதிவு எண் கொண்ட சுசுகி சியாஸ் காரில் வந்த மர்ம நபர்கள், வேணு மீது மிளகாய் பொடி தூவி, குழந்தையை கடத்திச் சென்றனர். வேணு துரத்திச் சென்றும் கடத்தல்காரர்களை பிடிக்க முடியவில்லை.

குடியாத்தம் நகர காவல்துறையினர் தனிப்படை அமைத்து, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதன் அடிப்படையில், குழந்தை திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் அடுத்த தேவிகாபுரம் என்ற இடத்தில் காவல் துறையினரால் குழந்தை மீட்கப்பட்டது.

குழந்தை கடத்தப்பட்ட இரண்டு மணி நேரத்தில் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. கடத்தலுக்கான காரணம் மற்றும் கடத்தியவர்கள் குறித்து காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இந்த சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.