சென்னை :கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தபோது, தேமுதிகவுக்கு உறுதியளிக்கப்பட்ட தொகுதிகள் மற்றும் ஆதரவு வழங்கப்படவில்லை என்றும், இதனால் தேமுதிக தொண்டர்கள் ஏமாற்றப்பட்டதாக பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
மேலும், எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை வைத்து கூட்டணி அமைத்ததாகவும், ஆனால் அவர் தங்களை ஏமாற்றிவிட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக தேமுதிக அலுவலகத்தில் இன்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
கூட்டத்தில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், ”எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்தில் கூட்டணி குறித்த ஒப்பந்தத்தில் தேதி குறிப்பிட்டு கையெழுத்திடுவதில்லை. அதேபோலதான் தேமுதிக உடன் கூட்டணி ஒப்பந்தத்தில் தேதி குறிப்பிடாமல் கையெழுத்திட்டார்.
அதனால்தான் நாம் ஏமாந்துவிட்டோம். எடப்பாடி பழனிசாமி பிரச்சார கூட்டத்திற்கு பணம், குடிப்பதற்கு மது கொடுத்து ஆள் கூட்டி வருகின்றனர். நமது கூட்டத்திற்கு கேப்டன் மீதுள்ள அன்பால் மக்கள் திரண்டு வருகின்றனர்” என்றார்.
இந்த விவகாரம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, குறிப்பாக 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில். இருப்பினும், இந்தக் குற்றச்சாட்டுக்கு எடப்பாடி பழனிசாமி தரப்பிலிருந்து உடனடி பதில் எதுவும் வெளியாகவில்லை என்று தெரிகிறது.
