சென்னை :தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையின் ஆட்டம் மீண்டும் தொடங்கியுள்ளது, ஏற்கனவே நேற்று (30,12.24) ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
அதன்படி நேற்றிலிருந்தே ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதில், ராமநாதபுரம் மாவட்டத்தில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்த சூழலில், தமிழகத்தில் நாளை முதல் பரவலாக மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தகவலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் கூறியதாவது ” இன்று மாஞ்சோலை மலைப்பகுதி, ஊத்து, நாலுமூக்கு ஆகிய பகுதியில் கனமழை பெய்யும்.நாளை முதல் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்யும்” எனவும் கூறியுள்ளார். அத்துடன் கடந்த 24 மணி நேரத்தில் எந்தெந்த இடங்களில் அதிகமான மழைபதிவாகியுள்ளது என்பதற்கான விவரத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.
அதில், ” டிசம்பர் 30-ஆம் தேதி காலை 8.30 மணி முதல் டிசம்பர் 31-ஆம் தேதி காலை 8.30 மணி வரை கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் ஊத்து பகுதியில் 140 மில்லி மீட்டரும், நாலுமூக்கு பகுதியில் 128 மில்லி மீட்டரும், ககாச்சி பகுதியில் 118 மில்லி மீட்டரும்,மாஞ்சோலை பகுதியில் 102 மில்லி மீட்டரும்” மழை பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
கடந்த 24 மணி நேரத்தில் இந்த பகுதிகளில் அதிகம் மழை பதிவாகியுள்ளது. இன்றும் இந்த பகுதியில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளதால் அந்த பகுதியில் இருக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.
unknown node