ஊட்டி :நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று அதி கனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் தேனி, தென்காசி மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்டும், திண்டுக்கல், திருப்பூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, சேலம் மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நீலகிரி மாவட்டத்தில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, இன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு வெளியிட்ட அறிக்கையின்படி, இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலா தலங்களும் மூடப்படுகின்றன. மேலும், பொதுமக்கள் அவசியமற்ற பயணங்களை தவிர்க்கவும், பாதுகாப்பாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மழை மற்றும் இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்படும் பொதுமக்கள் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 மற்றும் 0423-2450034, 2450035-க்கு தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. 9488700588 என்ற வாட்ஸ் ஆஃப் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
