சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை – குற்றவாளி புகைப்படம் வெளியீடு.., தேடும் பணி தீவிரம்.!
திருவள்ளூர் கும்மிடிப்பூண்டி அருகே சாலையில் நடந்து சென்ற 10 வயது சிறுமியின் வாயை மூடி கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளியின் புகைப்படம் வெளியாகியுள்ளது.

திருவள்ளூர் : கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கம் பகுதியில், கடந்த சனிக்கிழமை (12.07.2025) 10 வயது சிறுமி ஒருவர் பள்ளி முடிந்து பாட்டி வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அவரைப் பின்தொடர்ந்து, ஆள்நடமாட்டம் இல்லாத நேரத்தில் வாயைப் பொத்தி கடத்திச் சென்று, அருகிலுள்ள தோப்பில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இந்தச் சம்பவம் சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது. சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி. தலைமையில் 3 டிஎஸ்பிக்கள் (ஜெயஸ்ரீ, தமிழரசி, புகழேந்தி) உள்ளிட்ட 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, குற்றவாளியைத் தேடும் பணி தீவிரமாக நடைபெறுகிறது.
அதன் ஒரு பகுதியாக, தமிழக – ஆந்திர எல்லையான எளாவூர் சோதனைச் சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசார் வாகன சோதனையிலும் ஈடுபட்டுள்ளனர். சிறுமி தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நலமாக உள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
தலைமறைவாக உள்ள குற்றவாளியை கைது செய்ய தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வரும் நிலையில் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில்இப்பொழுதுதேடும் பணி தீவிரமாக நடைபெறுகிறது.
