செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் அதிமுகவில் இருந்து நீக்கம்...இபிஎஸ் நடவடிக்கை!

ஏற்கனவே பதவி பறிக்கப்பட்ட முன்னாள் எம்.பி.சத்தியபாமா உள்ளிட்ட 12 பேரை கட்சியை விட்டு நீக்கி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நடவடிக்கை எடுத்துள்ளார்.

eps vs sengottaiyan

சென்னை :அதிமுகவில் மீண்டும் உட்கட்சி பூசல் வெடித்துள்ளது. முன்னாள் அமைச்சரும் கோபிச்செட்டிப்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான செங்கோட்டையன் ஆதரவாளர்கள் 12 பேர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கையை கட்சியின் பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி நேரடியாக மேற்கொண்டார். இதன் மூலம் செங்கோட்டையன் அணியினருக்கு கட்சியில் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி, கட்சியின் மூத்த அமைச்சர் செங்கோட்டையனை அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கியுள்ளார். அக்டோபர் 31 அன்று வெளியான அதிகாரப்பூர்வ அறிக்கையில், செங்கோட்டையன் கட்சியின் ஒற்றுமை, ஒழுங்கு மற்றும் கொள்கைகளுக்கு எதிராக செயல்பட்டதாகவும், நீக்கப்பட்ட தலைவர்களுடன் தொடர்பு கொண்டதால் கட்சியின் பெயரை கெட்டதாகவும் கூறப்பட்டு நீக்கம் செய்யப்பட்டிருந்தார்.

அதனைத்தொடர்ந்து தற்போது செங்கோட்டையன் ஆதரவாளர்கள் நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். நீக்கப்பட்டவர்களில் முக்கியமாக முன்னாள் எம்.பி. சத்தியபாமா அடங்குவார். அவர் ஏற்கனவே கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருந்தார். இப்போது மீண்டும் அவர் உள்ளிட்ட 12 பேர் முழுமையாக கட்சியை விட்டு நீக்கப்பட்டுள்ளனர். இவர்கள் செங்கோட்டையனுக்கு விசுவாசமாக செயல்பட்டு வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கட்சி ஒழுங்கீன நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி ஆதரவாளர்களுக்கு எதிராக பிரசாரம் செய்ததால் ஏற்கனவே பலர் நீக்கப்பட்டனர். தற்போது இந்த 12 பேர் நீக்கம் செங்கோட்டையன் அணியை பலவீனப்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இந்த நடவடிக்கை 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக அதிமுகவில் உட்கட்சி மோதலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.