சென்னை :தெரு நாய்களைப் பாதுகாக்க தனி காப்பகங்கள் அமைக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக, நாய்க்கடி சம்பவங்களைத் தடுக்கவும், தெரு நாய்களை துன்புறுத்தாமல் பாதுகாக்கவும் மாநில அரசு மற்றும் சென்னை மாநகராட்சியை விரிவான திட்டத்தை அளிக்குமாறு நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.
தற்போது சென்னையில் 1.8 லட்சம் தெரு நாய்கள் உள்ளதாகவும், 20,000 நாய்க்கடி சம்பவங்கள் பதிவாகியுள்ளது என மாநகராட்சி அதிகாரி நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. “தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடுவதுடன், அவற்றை பாதுகாக்க தனி காப்பகம் அமைக்க வேண்டும்,நாய்க்கடி சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கும் அதேநேரம் நாய்களை துன்புறுத்தக் கூடாது” என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், தடுப்பூசி மற்றும் கருத்தடை மையங்களை அதிகரிக்கவும், தெரு நாய்களுக்கு மைக்ரோசிப் பொருத்துவது குறித்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, சென்னை மாநகராட்சி ஒரு பிரத்யேக செல்லப்பிராணி அதிர்ச்சி மையத்தையும், கைவிடப்பட்ட நாய்களுக்கான காப்பகங்களையும் அமைக்க திட்டமிட்டுள்ளது, இவை தனியார் அமைப்புகளால் நிர்வகிக்கப்படும் என்றும் சொல்லப்படுகிறது.
