சென்னை :கரூர் பொதுக்கூட்ட நெரிசல் துயரச் சம்பவம் தொடர்பான சிபிஐ விசாரணை தீவிரமடைந்து வரும் நிலையில், தமிழக வெற்றிக்கழகத் தலைவர் நடிகர் விஜய்க்கு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. வரும் மார்ச் 15-ஆம் தேதி காலை கட்டாயமாக டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்று சிபிஐ தரப்பில் உறுதியாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே விஜய் தரப்பில் 15 நாட்கள் கால அவகாசம் கோரப்பட்டிருந்தது. தேர்தல் பணிகள் அதிகமாக இருப்பதால் இந்த அவகாசம் தேவை என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
ஆனால் சிபிஐ இந்த கோரிக்கையை நிராகரித்துவிட்டது. விசாரணைக்கு உடனடியாக ஆஜராக வேண்டும் என்று உறுதியான நிலைப்பாட்டை எடுத்துள்ளது.இதற்கு முன்பு ஜனவரி மாதத்தில் விஜய் டெல்லியில் சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராகி தனது தரப்பு விளக்கத்தை அளித்திருந்தார். மார்ச் 10-ஆம் தேதி மீண்டும் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டபோது அவகாசம் கோரப்பட்டது.
இப்போது அந்த அவகாசமும் நிராகரிக்கப்பட்டு, மார்ச் 15 அன்று காலை ஆஜராக வேண்டும் என்று சிபிஐ உத்தரவிட்டுள்ளது.கரூர் சம்பவத்தில் கூட்ட நெரிசலால் 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது. விஜய் தரப்பில் விசாரணை சென்னைக்கு மாற்ற முடியுமா என்று கேட்டபோது, சிபிஐ டெல்லியில்தான் விசாரணை நடைபெறும் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இதனால் விஜய் நேரில் டெல்லி சென்று ஆஜராக வேண்டிய நிலை உள்ளது.இந்த சம்மன் தமிழகத்தில் தற்போது நடைபெறும் சட்டமன்றத் தேர்தல் பணிகளுக்கு இடையூறாக அமையும் என்று தவெக வட்டாரங்கள் கருதுகின்றன. இருப்பினும் சிபிஐ விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிப்பது அவசியம் என்ற நிலைப்பாட்டில் விஜய் தரப்பு உள்ளது. மார்ச் 15 அன்று விஜய் டெல்லி செல்வாரா என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
