தற்குறியாமே தற்குறி... எனக்கு வாய்ல நல்லா வருது...முதலமைச்சர் விஜய் ஸ்பீச்!

ரீல்ஸ் போட்ட கூட்டம் இப்போது நியூஸ் பார்க்கிறார்கள், அது நல்லதுதான் என முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.

Hero Image

திருச்சி : திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற முதலமைச்சர் விஜய், தமிழ்த்தாய் வாழ்த்துடன் தனது உரையைத் தொடங்கினார். "தமிழ்நாட்டுக்கு எப்படி திருச்சி இதயம் போன்றதோ, அதேபோல் என் இதயத்திற்கு திருச்சி கிழக்கு மக்கள் மிகவும் நெருக்கமானவர்கள்" என்று கூறிய அவர், திருச்சி கிழக்கு தொகுதியுடன் தனக்குள்ள பாசப்பிணைப்பை வெளிப்படுத்தினார்.

தேர்தல் ஆணைய விதிகளின்படி தாம் பெரம்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்தாலும், திருச்சி கிழக்கு மக்கள் எப்போதும் தனது மனதில் சிறப்பு இடம் பெற்றிருப்பார்கள் என்றார்.

தமிழக மக்கள் தன்னை முதலமைச்சராக மட்டுமல்லாமல் முதல் சேவகராக ஆக்கியுள்ளதாக தெரிவித்த விஜய், ஆட்சிக்கு வந்து சில வாரங்களே ஆன நிலையில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சனம் செய்து வருவதாக கூறினார். "ஆறு மாதங்கள் அமைதியாக இருப்போம் என்றவர்கள் ஆறு நாட்கள் கூட அமைதியாக இருக்க முடியவில்லை" என கிண்டலடித்த அவர், தன்னை விமர்சிப்பவர்கள் தொடர்ந்து விமர்சிக்கட்டும், அதுதான் தனக்கு சக்தி என்று கூறினார்.

சமீபத்தில் கோட், சூட் அணிந்து வருவது குறித்து எழுந்த விமர்சனங்களுக்கும் விஜய் பதிலளித்தார். "கோட், சூட் அதிகாரம் செலுத்துபவர்கள் மட்டும்தானா அணிய வேண்டும்? நாங்களும் அணியக்கூடாதா? நான் வண்ண வண்ணமாக அணியவில்லை. நம் மனதைப் போலவே கருப்பு, வெள்ளை நிறத்தில்தான் அணிகிறேன்" என்று தெரிவித்தார். கருப்பு நிறத்தின் அரசியல் மற்றும் சமூக அடையாளம் அனைவருக்கும் தெரியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அரசியல் போட்டி குறித்து பேசிய விஜய், "தமிழகத்தில் இப்போது அரசியல் போட்டி என்றால் அது த.வெ.க மற்றும் திமுகவுக்கிடையே மட்டுமே உள்ளது. இதற்கு நடுவில் வேறு யாருக்கும் வேலை இல்லை" என்றார். தேர்தலுக்கு முன்பும் பின்னரும் சில சக்திகள் த.வெ.க ஆட்சிக்கு வரக்கூடாது என முயற்சி செய்ததாக குற்றம்சாட்டிய அவர், "இந்த விஜயின் ஆட்சி அமைந்திருக்கக் கூடாது என்று நினைத்தால் அது ஸ்டாலின் தான்; மற்றவர்கள் பற்றி பேச வேண்டிய அவசியமே இல்லை" என்றார்.

இளைஞர்கள் மற்றும் பெண்கள் அரசியலை உன்னிப்பாக கவனிக்கத் தொடங்கியிருப்பதை வரவேற்ற விஜய், முன்னர் அரசியலில் அக்கறை காட்டாத தலைமுறையினர் கூட இப்போது சட்டசபையில் என்ன நடக்கிறது என்பதை கவனிக்கிறார்கள் என்றார். "ரீல்ஸ் பார்த்த கூட்டம் இப்போது செய்திகளை பார்க்கிறது; அதில் எங்களுக்கு பெருமை தான்" என்று கூறினார்.

திமுகவினர் மக்களை "தற்குறி" என விமர்சித்ததாக கூறிய விஜய், "அதே மக்கள் தான் உங்களுக்கு பல ஆண்டுகளாக வாக்களித்தார்கள். உங்களுக்கு வாக்களித்த போது அவர்கள் நல்லவர்கள், எங்களுக்கு வாக்களித்தால் தற்குறியா?" என கேள்வி எழுப்பினார். மக்கள் மனதை புரிந்து கொள்ளாததால்தான் திமுக இத்தகைய நிலைக்கு வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தற்குறி, தற்குறின்னு சொல்லிக்கிட்டே இருக்காதீங்க... அப்புறம் எனக்கு வாய்ல நல்லா வருது வேணாம் என்று பார்க்கிறேன் நம்ம விஜயகாந்த் அண்ணன் சொல்ற மாதிரி எனவும் பேசினார்.

அதிமுக குறித்தும் விஜய் கருத்து தெரிவித்தார். அண்ணா தொடங்கிய கட்சியை அடிமைக் கூடாரமாக மாற்றியவர்கள் யார் என்று கேள்வி எழுப்பிய அவர், திமுகவின் வீழ்ச்சிக்கு காரணம் வெளியே இல்லை, அவர்களது குடும்ப அரசியல்தான் என்று திமுக தொண்டர்களே கூறுவதாக தெரிவித்தார்.

த.வெ.க ஆட்சியின் நடவடிக்கைகள் குறித்தும் விஜய் விரிவாக பேசினார். 200 யூனிட் இலவச மின்சார திட்டம், டாஸ்மாக் கடைகள் மூடப்பட்ட நடவடிக்கைகள், விவசாயக் கடன் தள்ளுபடி முயற்சிகள் உள்ளிட்டவை குறுகிய காலத்திலேயே முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கூறினார். முந்தைய ஆட்சியில் நிதி நிலைமை பாதிக்கப்பட்டிருந்தாலும், விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க அரசு தொடர்ந்து முயற்சி செய்து வருவதாக உறுதியளித்தார்.

சட்டம்-ஒழுங்கு நிலைமை குறித்து எழும் விமர்சனங்களுக்கும் பதிலளித்த அவர், முந்தைய ஆட்சியில் போதைப்பொருள் கலாச்சாரம் மாநிலம் முழுவதும் பரவியதாக குற்றம்சாட்டினார். பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான குற்றங்களை கட்டுப்படுத்த திறமையான காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த வாரம் "சிங்கப்பெண் காவல் படை" தொடங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார். குற்றவாளிகளுக்கு விரைவாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து தண்டனை பெற்றுத் தர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

மேலும், திமுக மற்றும் சில கட்சிகள் இணைந்து மறைமுகமாக ஆட்சி அமைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டிய விஜய், "த.வெ.க ஆட்சி அமைந்தால் ஊழல், லஞ்சம், கொள்ளை அனைத்தும் முடிவுக்கு வந்துவிடும் என்பதால் சிலருக்கு பயம் ஏற்பட்டது" என்றார். திமுகவை "மக்களை விட்டு தூரம் சென்ற சக்தி" என்றும் விமர்சித்தார்.

கூட்டணி அரசியல் குறித்து பேசிய விஜய், த.வெ.க தனிப்பெரும்பான்மை பெற்றிருந்தாலும் கூட்டணி கட்சிகளை மதித்து செயல்படும் என்றார். மதச்சார்பற்ற கொள்கை, மாநில உரிமைகள், நதிநீர் உரிமைகள், சமூகநீதி, சமத்துவம் ஆகியவற்றில் எந்த சமரசமும் இருக்காது என்று உறுதியளித்தார்.

உரையின் இறுதியில், "தமிழ்நாட்டின் 234 தொகுதிகளும் நமது தொகுதிகள்தான். பெரம்பூரும் திருச்சி கிழக்கும் எனக்கு இரண்டு கண்கள் போன்றவை. அதிலும் திருச்சி கிழக்கு என் செல்லப்பிள்ளை போன்றது" என்று கூறிய விஜய், வரவிருக்கும் இடைத்தேர்தலில் திருச்சி கிழக்கு மக்களே தேர்ந்தெடுக்கும் ஒருவரை வேட்பாளராக நிறுத்த உள்ளதாக அறிவித்தார். ஊழல் மற்றும் லஞ்சமற்ற ஆட்சியை உருவாக்குவேன் என்றும், தனது வாழ்க்கையின் மீதமுள்ள காலம் மக்களுக்காகவே உழைப்பேன் என்றும் உறுதியளித்து உரையை நிறைவு செய்தார்.