டி.டி.வி. தினகரன் நினைத்தால் கூட்டணிக்கு தயார்...அ.தி.மு.க.வில் சேர விரும்பும் ஓ.பி.எஸ்!

எங்களைப் பார்த்தால் பாவமாக இல்லையா? தேர்தலில் போட்டியிட ஒருங்கிணைப்புக் குழு தொடங்கப்படவில்லை என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

o panneerselvam eps ttv

சென்னை :பெரியகுளத்தில் உள்ள தனது பண்ணை வீட்டில் ஓ.பன்னீர்செல்வம் நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை கூட்டம் நடத்தினார். தமிழகம் முழுவதிலும் இருந்து அவரது ஆதரவு மாவட்ட நிர்வாகிகள் பலர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கூட்டணி, தேர்தல் உத்தி, தொகுதி பங்கீடு உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் விரிவாக விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த ஆலோசனைக்குப் பிறகு ஓ.பி.எஸ். தனது அடுத்தகட்ட முடிவை விரைவில் அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அ.தி.மு.க.வில் இணைந்தாலும் ஓ.பி.எஸ்.-க்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்படாது, தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் நிற்க வாய்ப்பு அளிக்கப்படாது என்ற தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. இதனால் அவர் தனது நிலைப்பாட்டை அறிவிப்பதில் தாமதம் செய்து வந்தார். இந்நிலையில், அ.ம.மு.க. அணியில் குக்கர் சின்னத்தில் ஓ.பி.எஸ். மற்றும் அவரது ஆதரவாளர்கள் இருவருக்கு சீட்டு வழங்க உறுதியளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பெரியகுளம், போடி சட்டமன்றத் தொகுதியில் தொடர்ந்து 6 முறை போட்டியிட்டு இதுவரை தோல்வியே காணாத தலைவராக ஓ.பி.எஸ். உள்ளார். ஆனால் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் பலாபழம் சின்னத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இந்தப் பின்னணியில் அவரது அடுத்த தேர்தல் உத்தி மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஓ.பி.எஸ்., “எதிரும் புதிருமாக இருந்த டிடிவி தினகரனும் எடப்பாடி பழனிசாமியும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஒன்றிணைந்திருக்கிறார்கள். நாங்களும் இணைய வேண்டும் என்றுதான் சொல்கிறோம். டிடிவி தினகரன் அந்தக் கோரிக்கையை அங்கு வலியுறுத்தினால், நாங்கள் இணைந்திடலாமே. அந்த வேலையை செய்தால் அதிமுக மாபெரும் வெற்றியடையும்” என்று தெரிவித்தார்.

கூட்டணி குறித்து தொடர்ந்து பேசிய ஓ.பி.எஸ்., “எங்களைப் பார்த்தால் பாவமாக இல்லையா? தேர்தலில் போட்டியிட ஒருங்கிணைப்புக் குழு தொடங்கப்படவில்லை” என்று உருக்கமாகக் கூறினார். மேலும், “அருமை அண்ணன் இ.பி.எஸ். உடன் டிடிவி தினகரன் பேச வேண்டும். எதிரும் புதிருமாக இருந்த டிடிவி தினகரனும் இ.பி.எஸ். ஒன்றிணைந்துள்ளனர்” என்று குறிப்பிட்டார். இதன்மூலம் அதிமுகவில் இணைவதற்கு தனக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று அவர் மறைமுகமாக வலியுறுத்தியுள்ளார்.