சென்னை :தஞ்சாவூர் செங்கிப்பட்டியில் இன்று (மார்ச் 4, 2026) தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. கழுத்தில் பச்சை துண்டு அணிந்து விஜய் கூட்டத்திற்கு வந்து பங்கேற்றார். இந்தக் கூட்டத்தில் அவர் ஆற்றிய உரை தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.விஜய் தனது உரையில் “இது எலக்சன் இல்லை, எமோஷன்” என்று தொடங்கி, தவெகவின் அரசியல் பயணத்தை உணர்ச்சிபூர்வமாக விளக்கினார். “சின்ன பசங்க எல்லாம் ஓம் சக்தி பராசக்தி… திமுக ஒரு தீய சக்தி என்று பேச ஆரம்பிச்சுட்டாங்க” என்று குறிப்பிட்டு, திமுகவை கடுமையாக விமர்சித்தார்.
தவெகவே தமிழ்நாட்டில் விசில் போடும் அணி என்றும், திமுக ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவோம் என்றும் உறுதியளித்தார்.“டெல்லி அணி, அந்த அணி, இந்த அணி எல்லாம் இந்த எலெக்சன்ல நொறுங்கும்… தவெக அடிச்சி நொறுக்கும்” என்று விஜய் கூறினார். தமிழ்நாடு கிரிக்கெட் அணியைப் போலவே தவெகவும் எதிரணிகளை வீழ்த்தும் என்றும், “விசில் போட போவது தவெக தான்” என்றும் தெரிவித்தார். “எனக்கும் மக்களுக்கும் இடையே வேறு யாரும் உள்ளே நுழைய முடியாது” என்று தனது நேரடி மக்கள் தொடர்பை வலியுறுத்தினார்.
திமுக ஆட்சியை கடுமையாக விமர்சித்த விஜய், “மணல் மாஃபியா கும்பலுக்கு ஆதரவு கொடுப்பது திமுகதான் என்பதை மறுக்க முடியுமா? ஆட்சி முடியும் நேரத்தில் பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவது ஏன்?” என்று கேள்விகளை அடுக்கினார். சென்னையில் “டெல்லி, டெல்லி” என்று கூவுவதும், ரெய்டு வந்தால் “டெல்லிக்கு வெள்ளைக் குடை பிடிப்பது”யும் யாருடைய செயல் என்று கேட்டு, மக்களை சிந்திக்க வைத்தார்.
இறுதியாக, “மறுபிறவி உண்மையாக இருந்தால் அடுத்த பிறவியில் விவசாயி மகனாக பிறக்கணும்னு ஆசைப்படுறேன்” என்று உணர்ச்சிமயமாக பேசிய விஜய், ஊழலற்ற உண்மையான சமூக நீதியை நிலைநாட்ட தவெக ஆட்சி அமைய வேண்டும் என்று முடித்துக் கொண்டார். இந்த உரை தவெக தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
