“முதல்வர் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்” – தமிழிசை சௌந்தரராஜன்.!
தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானியர்களை வெளியேற்றவில்லை என்றால் முதல்வர் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று தமிழிசை சௌந்தரராஜன் கூறியிருக்கிறார்.

சென்னை : தமிழகத்தில் சட்டத்துக்குப் புறம்பாக தங்கியுள்ள பாகிஸ்தான் பங்களாதேஷை சேர்ந்தவர்களை வெளியேற்ற தமிழக அரசை வலியுறுத்தியும் பயங்கரவாத தாக்குதலை கண்டித்தும், பாகிஸ்தானை கண்டித்தும், தமிழகம் முழுவதும் பாஜக தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதன் ஒரு பகுதியாக சென்னையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழிசை சௌந்தரராஜன், ”முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசு எது கூறினாலும் கேட்க மாட்டார். தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானியர்களை வெளியேற்றவில்லை என்றால் முதலமைச்சர் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்’ என்றார்.
தொடர்ந்து நீட் தேர்வு குறித்து பேசிய அவர், ”சட்டை பொத்தானை காரணம் காட்டி வேறு சட்டை போடும்படி நீட் தேர்வில் சொல்லப்படவில்லை. இங்குள்ள அதிகாரிகள் தேர்வின் புனிதத்தை கெடுக்க வேண்டுமென்றே இப்படி நடக்கிறார்கள். நீட் மாணவர்களை உதாசீனப்படுத்தி, துன்புறுத்தும் அதிகாரிகளை தண்டிக்க வேண்டும்.
இதற்காக நீட் தேர்வை குறை சொல்ல முடியாது. முதல்வருக்கு பாராட்டு விழா நடத்த பல்கலைமற்றும் கல்லூரிகளை கட்டாயப்படுத்தி உள்ளனர். நீட் தேர்வை நடத்த இங்கே நியமிக்கப்படும் அதிகாரிகள் வேண்டுமென்றே மாணவர்களை துன்புறுத்துகிறார்கள். மாணவர்கள் பட்டன் உள்ள சட்டையை கழட்ட வேண்டும் என எந்த உத்தரவும் இல்லை” என்று கூறினார்.