மதுரை :தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) இரண்டாவது மாநில மாநாடு, ஆகஸ்ட் 21, 2025 அன்று மதுரை பாரபத்தியில் 506 ஏக்கர் நிலப்பரப்பில் பிரமாண்டமாக நடைபெறுகிறது. இந்த மாநாட்டிற்காக காலை முதலே லட்சக்கணக்கான தொண்டர்களும், ரசிகர்களும் மதுரைக்கு கூட்டம் கூட்டமாக படையெடுத்து வருகின்றனர். மாலை 4 மணி முதல் 7 மணி வரை நடைபெற திட்டமிடப்பட்டிருந்த இந்த மாநாடு, தொண்டர்களின் மிகப்பெரிய வருகையால் முன்கூட்டியே தொடங்கப்படலாம் என தவெக தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.
மதுரை விமான நிலையத்திற்கு அருகே உள்ள பாரபத்தி பகுதியில் நடைபெறும் இந்த மாநாட்டிற்கு, வாகனங்களை நிறுத்துவதற்காக 6 இடங்கள் தனியாக ஒதுக்கப்பட்டுள்ளன. தவெக தலைவர் நடிகர் விஜய், இந்த மாநாட்டிற்கு வரும் தொண்டர்களுக்கு உணவு, தண்ணீர் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்து தருமாறு கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இந்த நிலையில், நடிகர் விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர், மதுரை மாநாட்டை முன்னிட்டு தனது மகனுக்கு உருக்கமான வாழ்த்து செய்தியை வெளியிட்டுள்ளார். “நீ அரியணை ஏறும் நாள் வரும்… திரையில் உன்னை பார்த்து உயர்த்திய தாய்மார்கள், தம்பி தங்கைகள் அரசியலில் வெற்றிக்கு துணை நிற்கட்டும். வரவிருக்கும் தேர்தல் உன் இமாலய வெற்றியைக் காட்டும்.
நீ அரியணை ஏறும் நாள் வரும்… அது உன் தொண்டர்களின் திருநாள். தமிழக வெற்றிக் கழகம் தடைகளை வெல்லும் கழகம் என்று காட்டு, நேர்மையான தலைவன் என்பதற்கு நீதான் எடுத்துக்காட்டு. உன்னோடு வரும் தொண்டர் படை இந்த நாட்டில் வேறு யாருக்கும் இல்லை, உன் வெற்றிக்கு வானமே எல்லை… வாழ்த்துகள் விஜய்,” என்று அவர் உருக்கமாக தெரிவித்தார்.
