புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரிக்கை இப்போ வர ரெண்டு கவர்மெண்டும் கண்டுக்கல - விஜய்!

தமிழ்நாட்டிலும் திமுக - காங்கிரஸ் குழப்ப அணியாகத்தான் இருக்கிறது என விஜய் தெரிவித்துள்ளார்.

Hero Image

புதுச்சேரி : தட்டாஞ்சாவடி பகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) தலைவர் விஜய் தனது தேர்தல் பிரச்சாரத்தை இன்று தொடங்கினார். காலாப்பட்டு, லாஸ்பேட்டை, உழவர்கரை உள்ளிட்ட 12 தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.மக்களிடம் உரையாற்றிய விஜய், “எல்லாருக்கும் வணக்கம். என் நெஞ்சில் குடியிருக்கும் புதுச்சேரி மக்கள் அனைவருக்கும் என்னுடைய வணக்கம். எல்லாரும் காலையில் சாப்பிட்டீங்களா?” என்று உற்சாகமாகப் பேசத் தொடங்கினார்.

பின்னர் நேரடியாக விஷயத்திற்கு வந்த விஜய், “புதுச்சேரி தேர்தலில் நாம் TVK சார்பில் போட்டியிடுகிறோம். நம்முடன் கூட்டணி கட்சியான நேயம் மக்கள் கழகம் உருளையன்பேட்டை மற்றும் தட்டாஞ்சாவடி தொகுதிகளில் போட்டியிடுகிறது. நமது கட்சி வேட்பாளர்கள் அனைவரும் களத்தில் மக்களோடு மக்களாக நிற்கும் ஆளுமைகள். அவர்களைத் தேர்ந்தெடுத்து உங்கள் முன்னால் ஒப்படைத்துள்ளேன். அவர்கள் அனைவரையும் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

மேலும், “நமது வேட்பாளர்களுக்கு விசில் சின்னத்தில் ஓட்டு போடுங்கள். நமது கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அவர்களின் சின்னத்தில் ஓட்டு போடுங்கள்” என்று வலியுறுத்தினார்.புதுச்சேரியில் TVK முதன்முறையாகப் போட்டியிடும் நிலையில், இரு பெரிய கூட்டணிகள் இருப்பதைச் சுட்டிக்காட்டிய விஜய், “இங்கு இருக்கும் காங்கிரஸ்-திமுக கூட்டணியும், பாஜக-என்.ஆர். காங்கிரஸ் கூட்டணியும் மக்களுக்கு எந்தப் பயனும் தராதவை. காங்கிரஸ் பல முறை ஆட்சியில் இருந்தும், திமுக இரண்டு-மூன்று முறை ஆட்சியில் இருந்தும் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கொடுக்கவில்லை. பாஜக ஆட்சியிலும் அதே நிலைதான்.

அமரர் சுஷ்மா சுவராஜ் குழு மாநில அந்தஸ்து கொடுக்கலாம் என்று பரிந்துரைத்தும் 20 ஆண்டுகளாக எந்த அரசும் அதை நிறைவேற்றவில்லை” என்று குற்றம் சாட்டினார்.ரேஷன் கடை பிரச்சனை உள்ளிட்ட பல விவகாரங்களை எடுத்துக்காட்டிய விஜய், “மக்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாதவர்கள், எனக்கு அரசியல் அனுபவம் இல்லை என்று சொல்கிறார்கள்.

ஆனால் மக்களின் பிரச்சனைகளை நான் முன்வைக்கும்போது அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை” என்றார்.இறுதியாக, “திமுக-காங்கிரஸ் கூட்டணியும், பாஜக கூட்டணியும் மக்களுக்கு ஒன்றும் செய்யப் போவதில்லை. மக்களுக்காக, மக்களோடு நிற்கும் TVK வேட்பாளர்களுக்கு உங்கள் விசில் சின்னத்தில் ஓட்டு போடுங்கள். ஒரு விரல் புரட்சியை, விசில் புரட்சியை புதுச்சேரியிலும் உருவாக்குங்கள். எனக்கு ஒரே ஒரு வாய்ப்பு கொடுங்கள். உங்கள் விஜய் உங்களுக்குத் துணையாக இருப்பான்” என்று உணர்ச்சிபூர்வமாகப் பேசினார்.

TVK-வின் புதுச்சேரி தேர்தல் விசன் மற்றும் அஜெண்டாவை சுருக்கமாக விளக்கிய விஜய், முழு மாநில அந்தஸ்து, உள்ளாட்சித் தேர்தல், மகப்பேறு உதவித் தொகை, அரசு வேலைவாய்ப்பு, பயிர் காப்பீடு, மீனவர்களுக்கு டீசல் மானியம், மருத்துவக் காப்பீடு, இலவச மின்சாரம் உள்ளிட்ட வாக்குறுதிகளை மக்களுக்கு எடுத்துரைத்தார்.“நான் வருகிறேன். விசில் அடிக்க ரெடியா?” என்று கேட்டு, மக்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்திய விஜய், “மீண்டும் சந்திக்கும் வரை நன்றி, வணக்கம்” என்று பிரச்சாரத்தை நிறைவு செய்தார்.