டெல்லி :ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்துப் பேசினார். சுமார் ஒன்றரை மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு குறித்து முக்கிய ஆலோசனைகள் நடைபெற்றன.
அதிமுக – பாஜக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு இழுபறி நீடித்து வரும் நிலையில், இந்த சந்திப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது. அதேநேரம், அமித் ஷா பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுடனும் தனித்தனியாக ஆலோசனை நடத்தவிருக்கிறார்.
தொகுதிப் பங்கீடு குறித்து எடப்பாடி பழனிசாமி பேட்டியளித்தபோது, “அதிமுக 165 தொகுதிகளில் போட்டியிட உள்ளது. பாஜகவுக்கு 31 தொகுதிகள், பாமகவுக்கு 17 தொகுதிகள் ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளது. அமமுகவுக்கு 9 தொகுதிகளும், தமாகாவுக்கு 4 தொகுதிகளும் ஒதுக்கப்படும். மீதமுள்ள தொகுதிகள் இதர கூட்டணி கட்சிகளுக்கு பகிர்ந்து தரப்படும்” என்று தெரிவித்தார்.
பேச்சுவார்த்தை குறித்து மகிழ்ச்சி தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, “ரொம்ப சந்தோஷமாக இருக்குது. அனைத்தும் நல்லபடியாக முடிந்தது. எப்போதும் சிரித்த முகம்தான்” என்று கூறினார். நாளை (மார்ச் 19) பாஜக மேலிட பொறுப்பாளர் பியூஷ் கோயலுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. அடுத்த 4 நாட்களில் அனைத்து பேச்சுவார்த்தைகளும் நிறைவு பெறும் என்றும் அவர் உறுதியளித்தார்.
அதனைத்தொடர்ந்து , தவெக (தமிழக வெற்றிக்கழகம்) உடன் கூட்டணி குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, “தவெகவுடன் கூட்டணி குறித்து எந்த பேச்சுவார்த்தையும் NDA தலைவர்கள் நடத்தவில்லை. எங்களது கூட்டணிக்கு இனி புதிய கட்சிகள் வர வாய்ப்பு இல்லை” என்று எடப்பாடி பழனிசாமி தெளிவுபடுத்தினார்.ஒட்டுமொத்தமாக, இந்த சந்திப்பு அதிமுக – பாஜக கூட்டணியை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது. தொகுதிப் பங்கீடு இறுதி நிலையை எட்டியுள்ள நிலையில், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
