கோவை : கோவையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழக அரசின் செயல்பாடுகள் மற்றும் தேர்தல் வாக்குறுதிகள் குறித்து கடுமையாக விமர்சித்தார்.
அவர் கூறியதாவது “திருச்சியில் முதலமைச்சர் பேசும்போது, எல்லாவற்றையும் ஒரே நாளில் மாற்ற முடியாது என்று கூறியிருந்தார். ஆனால், தேர்தலுக்கு முன்பு ஆட்சியில் இருந்தபோது எங்களை நோக்கி மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளையும் விமர்சனங்களையும் முன்வைத்தவர்கள் இன்று என்ன பதில் சொல்கிறார்கள் என்பதே என் கேள்வி.
கரூரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், மதுபான விற்பனை மற்றும் டாஸ்மாக் குறித்து பாடல்கள் பாடி விமர்சனம் செய்தார்கள். அப்போது நாங்கள் பலமுறை விளக்கம் அளித்தோம். சட்டமன்றத்திலும் பதில் கூறினோம். ஆனால் அவற்றை ஏற்காதவர்கள், இன்று ஆட்சியில் அமர்ந்த பிறகு அதே பிரச்சினைகளுக்கு என்ன தீர்வு கண்டிருக்கிறார்கள்?
இப்போது சமூக வலைதளங்களில் மக்கள் கேட்கிறார்கள். அப்போது மேடைகளில் நின்று பாடியவர்கள், இன்று என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள் என்று கேள்வி எழுப்புகிறார்கள். அந்தத் துறையின் அமைச்சர் கூட தற்போது விளக்கம் அளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தேர்தல் வாக்குறுதிகளை வழங்குவதற்கு முன்பு, அவற்றை நடைமுறைப்படுத்த முடியுமா என்பதை ஆராய்ந்திருக்க வேண்டும். ஆனால் சாத்தியமா என்பதை யோசிக்காமல் வாக்குறுதிகள் வழங்கப்பட்டன. ஆட்சிக்கு வந்த பிறகும் அவற்றை முழுமையாக நிறைவேற்றுவதற்கான தீவிர முயற்சிகள் எடுக்கப்படவில்லை.
என்னைப் பொறுத்தவரை, இது மக்கள் நலன் சார்ந்த உண்மையான ஆட்சி அல்ல. இது ஒரு ‘ரீல்ஸ் ஆட்சி’. இன்னும் அந்த விளம்பர அரசியலின் மனநிலையில்தான் அமைச்சர்களும் அரசும் இருக்கின்றன. மக்களுக்காக செயல்படும் உண்மையான ஆட்சி இன்னும் தொடங்கவில்லை. இனிமேலும் இந்த அரசு மக்களின் எதிர்பார்ப்புகளை முழுமையாக நிறைவேற்றும் என்ற நம்பிக்கை பொதுமக்களிடையே இல்லை” என்று செந்தில் பாலாஜி விமர்சித்தார்.
