வேங்கைவயல் விவகாரத்தில் சாதிய மோதல், அரசியல் காழ்ப்புணர்ச்சி இல்லை! தமிழக அரசு விளக்கம்!

வேங்கைவயல் விவகாரத்தில் அரசியல் காழ்ப்புணர்ச்சி, சாதிய மோதல் காரணம் இல்லை. இது தொடர்பாக வெளியான ஆடியோ உண்மையானது என தமிழக அரசு மதுரை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

Tamilnadu Govt - Vengaivayal

மதுரை :புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தேக்க தொட்டியில் மலம் கலந்த விவகாரம் 2 ஆண்டுகள் கடந்தும் இன்னும் பேசுபொருளாகவே உள்ளது. தமிழக அரசு சார்பில் சிபிசிஐடி போலீசார் 3 பேரை சுட்டிக்காட்டி இவர்கள் இச்செயலுக்கு காரணமானவர்கள் என கூறியுள்ளனர். அவர்கள் பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர்கள். இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் என விசிக உள்ளிட்ட கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இதுதொடர்பாக வேங்கைவயல் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வேண்டும் என்ற நோக்கத்தில் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. அதில் தமிழக அரசு சார்பில் அரசு வழக்கறிஞர் ஹாசன் முகமது ஜின்னா வாதிட்டார். அவர் கூறுகையில், வேங்கைவயல் விவகாரம் சாதிய மோதலோ அல்லது அரசியல் காழ்புணர்ச்சியோ அல்ல. அது தனிமனித குற்றம் என விளக்கம் அளித்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக அண்மையில் வெளியான ஒரு செல்போன் ஆடியோ உண்மை என்றும் கூறினார்.  மேலும் இது தொடர்பாக 389 சாட்சியங்களை விசாரணை செய்து 196 செல்போன்களை பறிமுதல் செய்து, 87 டவர் லொகேஷன்களில் கிடைத்த தரவுகளின் அடிப்படையிலும், 31 பேரிடம் மேற்கொண்ட டிஎன்ஏ பரிசோதனை முடிவுகளின் அடிப்படையிலும், அறிவியல்பூர்வ ஆய்வை அடுத்தே 3 பேர் குற்றவாளிகள் என கண்டறியப்பட்டு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது என தமிழக அரசு சார்பில் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் விளக்கம் அளிக்கப்பட்டது.